28 ஏப்., 2010

இந்தியாவுக்கெதிராக உளவு:இந்திய தூதரக பெண் அதிகாரி மாதுரி குப்தா கைது

புதுடெல்லி:பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டி இஸ்லாமாபாத்தில் இந்தியத்தூதரக அதிகாரியான மாதுரி குப்தா என்ற பெண்மணியை டெல்லி போலீசார் கைதுச்செய்தனர்.

இவர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இரண்டாம் நிலை செயலாளராக பணியாற்றியவர். கடந்த 3 ஆண்டுகளாக இந்தியத்தூதரக வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் பணியாற்றி வந்தவர் இவர். 53 வயதான மாதுரி குப்தா இதுவரை திருமணம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதில் இன்னொரு திடுக்கிடும் தகவல் என்னவென்றால் இஸ்லாமாபாத்தில் ‘ரா’ உளவுப்பிரிவின் தலைவர் ஆர்.கே.சர்மாவும் சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிப்பில் உள்ளார். மாதுரி குப்தா முக்கியமான தகவல்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ க்கு அளித்த தகவல் உளவுத்துறையினருக்கு கிடைத்ததையடுத்து அவர் கைதுச்செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு மாதுரி குப்தா தகவல்களை அளித்ததாக உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை தெரிவித்தார். உளவுத்தறையினரும், தில்லி போலீசாரும் அவரிடம் 4 நாட்களாக துருவித்துருவி விசாரணை நடத்தினர். அதில் ஏராளமான அதிர்ச்சி தகவல்களை மாதுரி குப்தா வெளியிட்டார்.

பாகிஸ்தான் உளவுப்படையான ஐ.எஸ்.ஐ.யில் பணியாற்றும் ராணா என்பவரிடம், இந்திய உளவு நிறுவனமான `ரா'-வின் உயர் அதிகாரி ஆர்.கே.சர்மா, தன்னிடம் அளித்த ரகசிய தகவல்களை அளித்து வந்ததாக மாதுரி குப்தா கூறினார்.

கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து, முக்கிய தகவல்களை கடத்தி வருவதாக அவர் தெரிவித்தார். கொள்கை முடிவுகள், பாகிஸ்தானில் இந்தியர்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை அளித்ததாக அவர் கூறினார்.

இதையடுத்து, அரசாங்க ரகசியங்கள் சட்டத்தை மீறியதற்காக, மாதுரி குப்தாவை போலீசார் கைது செய்தனர். நேற்றுமுன்தினம் அவரை தில்லி நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்தினர். அவரை மேலும் 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது. அவர் உருது மொழியில் புலமை பெற்றவர் என்பதால், அவரை மொழி பெயர்ப்புக்கு பயன்படுத்தி வந்தனர். இதற்கு முன்பு அவர் மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்திலும், வெளியுறவு அமைச்சகத்தின் பத்திரிகையிலும் பணியாற்றி உள்ளார்.

பாகிஸ்தானில் பணியாற்றிக் கொண்டே, பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக வெளியுறவு அமைச்சக பெண் அதிகாரி கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இந்தியாவுக்கெதிராக உளவு:இந்திய தூதரக பெண் அதிகாரி மாதுரி குப்தா கைது"

கருத்துரையிடுக