25 ஏப்., 2010

மக்களுடைய சோம்பேறித்தனத்தால் வெளிநாட்டவர்கள் வருகிறார்கள்

ஸ்பார்டன்பர்க்:உழைப்பதற்குத் தயாரில்லாமல் உள்ளூர் மக்கள் அரசு தரும் இலவசங்களை வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தால், வேலை செய்வதற்காக வெளிநாட்டுத் தொழிலாளர்களை அமர்த்துவதைத் தவிர வேறு வழி என்ன இருக்கிறது என்று கேட்கிறார் தெற்கு கரோலினா மாநிலத்தின் துணை கவர்னர் ஆந்திரே பாயர்.

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில் சமீபகாலமாக மெக்ஸிகோ உள்ளிட்ட தென் அமெரிக்கக் கண்டத்தைச் சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக குடியேறுவது அதிகரித்து வருவதால் அமெரிக்க மாநிலங்கள் அனைத்துமே கலவரப்பட்டு நிற்கின்றன. இது இப்படியே போனால் வெளிநாட்டவர்கள் அதிக எண்ணிக்கையிலும் உள்நாட்டவர் சிறுபான்மையினராகவும் மாறிவிடுவார்களே என்று அஞ்சுகின்றனர்.

இந்த நிலையில் அரிசோனா மாநிலத்தில், வெளிநாட்டவர்கள் குடியேறுவதற்குக் கடும் நிபந்தனைகளை விதித்து சட்டம் இயற்றியிருக்கிறார்கள். அதைப் போல தெற்கு கரோலினாவிலும் சட்டம் வருமா என்று கேட்டபோதுதான் ஆந்திரே பாயர் கொட்டித் தீர்த்துவிட்டார் தன்னுடைய மனக்குமுறல்களை.

வேளைக்கு இலவச சாப்பாடு, உடல் நலத்தைப் பேண இலவச சிகிச்சை, படிப்பு இலவசம், பொழுதுபோக்கும் இலவசம் என்றால் எந்த பைத்தியம் வேலைக்குப் போய் கஷ்டப்படும் என்று சற்று கோபமாகவே கேட்டார் ஆந்திரே பாயர். நல்வாழ்வு அரசு என்று பெயரெடுத்திருப்பதால் இலவசங்களைக் கொடுப்பதே அரசுக்கு அழகு என்று யாரிடமும் கடுமையாக வேலை வாங்காமல் சும்மா விடுவதால் சோம்பேறித்தனம் அதிகமாகி எல்லோரும் வீட்டிலேயே ஓய்வெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். நாளை சட்டவிரோத குடியேற்றங்களால் நாட்டின் தன்மையே மாறி, பெரிய உள்நாட்டுக் கலவரம் வெடித்தால், இப்போது சோம்பேறியாக சுற்றித் திரிகிறவர்கள்தான் முதலில் அதன் விளைவை அனுபவிக்க நேரிடும் என்று அவர் எச்சரித்தார்.

கடந்த முறை கவர்னர் பதவி வேட்பாளராக குடியரசுக் கட்சியின் ஆதரவைப் பெற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசியபோதும் மக்களை நேரடியாகவே ஆந்திரே பாயர் திட்டினார். கோயில் மாடுகளைப் போல வீதிகளில் வெட்டியாகத் திரிந்து கொண்டு அரசு தரும் இலவச உதவி என்ன என்று பார்த்துக் கொண்டிருந்தால் உருப்படுவது எப்போது என்று கேட்டார் ஆந்திரே பாயர். இதனால் மக்களுக்குக் கடும் கோபம் வந்தது. (கோபம்தான் வந்ததே தவிர ரோஷம் வரவில்லை).

இப்போதும் அப்படியே தொடர்ந்து பேசி வருகிறார் ஆந்திரே பாயர் என்பது குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மக்களுடைய சோம்பேறித்தனத்தால் வெளிநாட்டவர்கள் வருகிறார்கள்"

கருத்துரையிடுக