27 ஏப்., 2010

இந்திய மெடிக்கல் கவுன்சிலை கலைத்து விடுவதே சிறந்தது

இந்திய மெடிக்கல் கவுன்சில் நாட்டின் மருத்துவ கல்வியின் கட்டுப்பாட்டை தன் வசம் வைத்திருக்கும் பொறுப்பானதொரு அமைப்பாகும். பல்வேறு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கு தகுதியின் அடிப்படையில் அங்கீகாரம் அளிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பை மருத்துவ கவுன்சிலுக்கு நிறைவேற்ற வேண்டியுள்ளது.

மருத்துவ கல்வி ஒரு தனியார் வியாபாரமாக மாறிவிட்ட சூழலில் அதி பயங்கரமான ஊழலும், அதிகார வர்க்கத்தின் உறவினர்களின் ஆதிக்கமும் கொடிக்கட்டி பறக்கிறது. அதன் ஒரு பகுதிதான் நேற்று முன்தினம் எம்.சி.ஏ வின் தலைவர் கேதன் தேசாய் மற்றும் மூன்று நபர்களின் கைது மூலம் வெட்ட வெளிச்சமானது.

தேசாய் இரண்டு கோடி ரூபாய் பஞ்சாபில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியின் அதிகாரியிடமிருந்து லஞ்சம் வாங்கியதைத் தொடர்ந்து சி.பி.ஐயின் கையில் சிக்கினார். ஆனால் மருத்துவ கல்வித் துறையில் பணியாற்றுபவர்கள் கூறுவது இது கற்பனைச் செய்யவே கடினமாக உள்ள விவகாரமாகும். ஆனால் அதுதான் இத்துறையின் நிலைமையும் கூட.

கேதன் தேசாய் ஏற்கனவே மருத்துவக் கவுன்சிலின் தலைவர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டவர். குஜராத்தில் அரசியல் தலைவர்களின் உதவியும், ஆதரவினாலும் அவர் மீண்டும் அப்பதவியில் அமர்ந்துள்ளார். லஞ்சம் மட்டுமே 2500 கோடி ரூபாய்க்கு மேல் தேசாய் சம்பாதித்துள்ளார் என கூறப்படுகிற்து.

ஆனால் தேசாய் மருத்துவ கல்வித்துறையில் பயங்கரமான ஊழல் தொடர்கதையில் ஒரு அங்கம் மட்டுமே. கவுன்சிலில் கேரளாவைச் சார்ந்த துணைத்தலைவர் உள்ளிட்ட இதர உறுப்பினர்களும் இந்த ஊழல் சீரியலில் மற்ற கதாபாத்திரங்களாவர். இவர்களை கவுன்சிலில் பதவியில் அமர்த்திக்கொண்டு மருத்துவ கல்வித்துறையை சுத்தப்படுத்தவே முடியாது. அதனால் மத்திய அரசு அவசரமாக செய்யவேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த பணி என்னவென்றால் மருத்துவ கவுன்சிலை கலைப்பதேயாகும்.

அடுத்தமாதம் பல்வேறு மருத்துவக் கல்விப் படிப்புகளில் மாணவர்கள் சேரும் காலக்கட்டமாகும். பல்வேறு மாநிலங்களில் செயல்படும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்களுடைய கல்வி நிறுவனத்தில் புதிய மருத்துவ படிப்புகளின் அங்கீகாரத்திற்காக எதனையும் செய்ய தயாராகும் காலக்கட்டமாகும். போதுமான விரிவிரையாளர்கள் இல்லாமலும், க்ளீனிக்கல் வசதிகள் இல்லாமலும் மருத்துவ படிப்புகளுக்கு அங்கீகாரம் கிடைத்தால் அவர்கள் மாணவர்களிடமிருந்து கொள்ளையடிப்பது 25 லட்சம் முதல் 50 லட்சம் வரையிலாகும்.

ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கும் துறைதான் இன்று இந்தியாவில் மருத்துவ கல்வித்துறை. அவசர நடவடிக்கைகளை இத்துறையில் மத்திய அரசு எடுத்தேயாக வேண்டும்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் மருத்துவ கவுன்சிலின் பிரச்சனைகளை ஆராய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுவை நியமித்துள்ளது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் அதைவிட முக்கியத்துவம் வாய்ந்தது தற்போதைய ஊழல் மருத்துவ கவுன்சிலை முழுமையாக கலைத்து விடுவதேயாகும்.
விமர்சகன்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இந்திய மெடிக்கல் கவுன்சிலை கலைத்து விடுவதே சிறந்தது"

கருத்துரையிடுக