3 ஏப்., 2010

அம்பானியை அசரவைத்த ஸுல்ஃபிகர்

சென்னை:சட்டத்தின் கை அம்பானி வரை கூட நீளும் என்பதை சென்னையைச் சேர்ந்த நுகர்வோர் நிரூபித்துக் காட்டியுள்ளார். ஆனால் இதை நிரூபிக்க அவருக்கு ஏழாண்டு காலம் ஆகியுள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் ஸுல்ஃபிகர் அன்னெரன்புர்ல்வாலா. டெலிபோன் ஹார்ட்வேர் சப்ளையரான இவர் கடந்த 2003ம் ஆண்டில் சென்னையில் உள்ள ரிலையன்ஸ் கடையில் செல்போன் ஒன்று வாங்கினார்.

ரூ.21 ஆயிரம் கொடுத்து வாங்கிய 24வது நாளிலேயே அந்த செல்போன் பிரச்னை செய்ய ஆரம்பித்துள்ளது. இதுபற்றி அதே கடையில் வாய் மொழியாக பலமுறை புகார் கூறியுள்ளார். ஆனால் கடை ஊழியர்கள் இதோ, அதோ என போக்கு காட்டிக் கொண்டிருந்தனர்.

பின்னர் எழுத்துப்பூர்வமாக அந்த கடையில் ஒரு புகாரை தந்துவிட்டு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், ரிலையன்ஸ் மண்டல மற்றும் தலைமை அலுவலகத்துக்கும் புகார்களை அனுப்பியுள்ளார்.

ஆனால் ஒருவரும் இவரின் புகாரை கண்டுகொள்ளவில்லை. எனவே 2004ம் ஆண்டில் சென்னையில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்தார். ஏ.பழனியப்பன் என்ற வழக்கறிஞர் ஸுல்ஃபிகருக்கு சார்பாக ஆஜராகி விவரங்களை நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார்.

செல்போன் வாங்கியதற்கான ரசீது முதல் ரிலையன்ஸ் தலைவர் அம்பானிக்கு எழுதிய கடிதம் வரை அத்தனை நகலையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இந்த வழக்கு 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவுக்கு வந்தது. தனது பொருளை விற்ற நிறுவனம் முறையாக பழுதுபார்க்காமல் நுகர்வோரை அலைக்கழித்ததாகக் கூறி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் செல்போனுக்கான ரூ.21 ஆயிரத்தையும் மனுதாரருக்கு திருப்பிக் கொடுக்குமாறு நுகர்வோர் நீதிமன்றம் ஆணையிட்டது.

இந்த தீர்ப்பும், செவிடன் காதில் சங்கு ஊதிய கதையானது. நீதிமன்றத்தின் தீர்ப்பை ரிலையன்ஸ் உட்பட யாரும் கண்டுகொள்ளவே இல்லை.

பதினெட்டு மாதங்கள் பொறுத்திருந்த ஸுல்ஃபிகர் கடந்த ஜூலை மாதம் மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

நீதிமன்ற ஆணை நிறைவேற்று மனு ஒன்றை நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியை கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.

இதைத் தொடர்ந்து கடந்த வாரம் வெள்ளிக் கிழமை அன்று மும்பை போலீசாருக்கு நீதிமன்ற ஆணை சென்று சேர்ந்ததை அடுத்து, இதுபற்றி முகேஷ் அம்பானியின் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக சென்னையில் உள்ள ரிலையன்ஸ் அதிகாரிகள் ஸூல்ஃபிகரை தேடி வந்து ரூ.71 ஆயிரத்துக்கான 'டிடி'யை கையில் திணித்து விட்டு, மனுவை வாபஸ் பெறுமாறு கேட்டுள்ளனர்.
source:thatstamil

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அம்பானியை அசரவைத்த ஸுல்ஃபிகர்"

கருத்துரையிடுக