ஐஸ்லாந்திலுள்ள எரிமலை வெடித்து சிதறியதால் வெளியான சாம்பலின் அளவுகள் மற்றும் அதன் தன்மைகளை ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள், அறிவியல் குறிப்புகள் மற்றும் ஆய்வுகளைக் காட்டிலும் கணினி மூலமான வரைபடங்களை வைத்து தேவைக்கும் அதிகமாக கூடுதலான எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து விட்டார்கள் என்கிற விமர்சனம் தற்போது எழுந்துள்ளது.
இந்த எரிமலை வெடிப்பு விமானப் போக்குவரத்தின் மீது ஏற்படுத்திய முன்னுதாரணமற்ற பாதிப்பு காரணமாக ஐரோப்பிய வான் பரப்பை மூட எடுக்கப்பட்ட முடிவுக்கு பின்னுள்ள அறிவியல் அடிப்படையை பல விமான நிறுவனங்கள் கேள்விக்குள்ளாக்கியுள்ளன.
ஐஸ்லாந்து எரிமலை கடந்த வாரம் மீண்டும் வெடித்தபோது, பிரிட்டிஷ் வானிலை முன்னறிவிப்பு நிறுவனம் பயன்படுத்திய கணினி மாதிரிகள் இந்த எரிமலை சாம்பல் துகள்கள் விரைவாக பிரிட்டன் மற்றும் வட ஐரோப்பாவை மூடிவிடும் என்று கணித்தன.
இந்த முடிவு விஞ்ஞானிகள் கூறும் முன்னெச்சரிக்கை கோட்பாடு என்பதனை அடிப்படியாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த கோட்பாட்டின்படி, எந்த ஒரு நடவடிக்கையையும் எடுப்பதில் ஒரு வரையறுக்கப்படாத ஆபத்து இருந்தால், அந்த நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று பிரேரிப்பவர்கள்தான், அந்த நடவடிக்கை ஒரு பாதுகாப்பான நடவடிக்கை என்பதை நிரூபிக்க வேண்டியர்கள் ஆவார்கள்.
பிரிட்டிஷ் வானிலை முன்னறிவிப்பு நிறுவனம் தாங்கள் பலூன்கள் மூலமாகவும், லேசர் கதிர்கள் மூலம் எடுத்த அளவீடுகளைக் கொண்டும் சேகரித்த பிந்தைய தகவல்கள், இந்த சாம்பல் துகள்கள் நிறைந்திருக்கும் பகுதி மற்றும் அவைகளின் அளவை உறுதிப்படுத்தியிருப்பதாக, தங்கள் தரப்பு நியாயத்தைச் சொல்கிறார்கள்.

0 கருத்துகள்: on "ஐஸ்லாந்து எரிமலை சாம்பல் : தேவைக்கு அதிகமான எச்சரிக்கை"
கருத்துரையிடுக