சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக ஜெகதீஷ் டைட்லர் மீது தொடரப்பட்ட வழக்கை முடித்துவிடலாம் என சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையை டெல்லி நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
1984 ஆம் ஆண்டு டெல்லியில் நிகழ்ந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெகதீஷ் டைட்லர் மீது குற்றம் சாற்றப்பட்டது.கலவரத்தை தூண்டிவிட்டதாக அவர் மீது குற்றம் சாற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில், சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் டைட்லருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்றும், எனவே டைட்லருக்கு எதிரான வழக்கை முடித்துவிடலாம் என்றும் இவ்வழக்கை விசாரித்த டெல்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தது.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதியன்று இந்த அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில் இந்த அறிக்கையை ஏற்பதாகவும், டைட்லருக்கு எதிரான வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்த போதுமான ஆவணங்கள் ஏதும் இல்லை என்றும் டெல்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி ராகேஷ் பண்டிட் இன்று தெரிவித்தார்.
இதன் மூலம் டைட்லருக்கு எதிரான வழக்கு கைவிடப்படுகிறது. இது காங்கிரஸ் கட்சிக்கும், டைட்லருக்கும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ள போதிலும், சீக்கிய அமைப்புகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
0 கருத்துகள்: on "சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: டைட்லர் மீதான வழக்கை கைவிட நீதிமன்றம் ஒப்புதல்"
கருத்துரையிடுக