1 ஏப்., 2010

குழாய் மூலம் எரிவாயு: ஈரானுடன் பேச்சு நடத்த இந்தியா முடிவு

ஈரானிலிருந்து குழாய் மூலம் பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு எரிவாயு கொண்டு வருவது தொடர்பாக ஈரானுடன் பேச்சு நடத்த இந்தியா முடிவு செய்துள்ளது.

ஏறக்குறைய 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை தற்போது பேச்சுவார்த்தை மூலம் மீண்டும் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தேவ்ரா, ஈரானின் வெளி விவகார துணை அமைச்சர் ஹெச்.நோக்ரெகர் ஷிராஸியிடம் விவாதித்தார்.


மெக்ஸிகோவில் நடைபெறும் 12-வது சர்வதேச எரிசக்தி மாநாட்டில் பங்கேற்றபோது முரளி தேவ்ரா ஈரான் அமைச்சருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது இருதரப்பினரும் மே மாதத்தில் விரிவாக பேச்சு நடத்துவதென முடிவு செய்யப்பட்டதாக சர்வதேச விவகாரங்களுக்கான இணைச் செயலர் சுனில் ஜெயின் தெரிவித்தார்.


பாதுகாப்பு காரணங்களுக்காக 2007-ம் ஆண்டிலிருந்து குழாய் மூலம் எரிவாயுவைக் கொண்டு வருவது குறித்த பேச்சு வார்த்தையில் இந்தியா பங்கேற்கவில்லை. அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஈரானின் முடிவுக்கு விடப்பட்டுள்ளதாக ஜெயின் மேலும் கூறினார்.


குழாய்ப் பாதை எரிவாயு திட்டத்தை நிறைவேற்றுவதில் இந்தியா தயக்கம் காட்டியதால், இந்தியாவை தவிர்த்து நிறைவேற்ற முடிவு செய்து ஈரானும், பாகிஸ்தானும் கையெழுத்திட்டன. இதையடுத்து தற்போது இந்தியாவும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.


ஈரானிலிருந்து 1,035கி.மீ. தூர குழாய் பாதை மூலம் எரிவாயுவை பாதுகாப்பாக இந்தியாவுக்கு வழங்கும் பொறுப்பை ஈரான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது. பாகிஸ்தான்-இந்திய எல்லையில் பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் எரிவாயுவுக்கு உரிய தொகையை மட்டும் பாகிஸ்தான் அளிக்க முன்வந்துள்ளது.


மூன்று நாடுகளும் இணைந்து இத்திட்டத்தை நிறைவேற்றும் வகையிலான கருத்தை ஈரான் முன்வைத்துள்ளது. இதன்படி இந்தியாவுக்கு வழங்கப்படும் எரிவாயு தடைப்பட்டாலும், ஒப்புக்கொண்ட அளவுக்கு உரிய தொகையை அளிக்க வேண்டும் என்று ஈரான் கூறுகிறது. ஈரான்-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் எரிவாயு பகிர்ந்தளிப்பதாகவும் அதை இரு நாடுகளும் தேவைக்கேற்ப பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் ஈரான் கூறுகிறது. ஆனால் பாகிஸ்தான்-இந்திய எல்லையில் வாயு விநியோகம் நடத்தப்பட வேண்டும் என்று இந்தியா கூறிவருகிறது. அத்துடன் பாதுகாப்பு நடைமுறைகளை ஒப்பந்தத்துடன் செயல்படுத்த வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.


ஈரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு வயலில் இருந்து பாரசிக வளைகுடா வழியாக ஈரான்-பாகிஸ்தான் எல்லை வரை 1,100கி.மீ. தூரத்துக்கான குழாய் அமைக்கும் பணியை ஈரான் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. பாகிஸ்தானிலிருந்து இந்தியா வரையிலான 1,035 கி.மீ. தொலைவு குழாய்ப் பாதை அமைக்கும் செலவில் பகுதியளவை பாகிஸ்தானும் ஏற்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது. குழாய்ப்பாதை அமைக்கும் செலவில் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஏற்றுக் கொண்டால், இப்பணிகள் விரைவாக நடைபெறுவதற்கான பணிகளை பாகிஸ்தான் முடுக்கிவிடும். இதனால் குறித்த காலத்திற்குள் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் இதுவரை பாகிஸ்தான் இதற்கு எவ்வித ஒப்புதலையும் அளிக்கவில்லை.


1990ம் ஆண்டிலேயே ஈரானிலிருந்து குழாய் மூலம் எரிவாயுவைக் கொண்டு வருவதென திட்டமிடப்பட்டது. இதற்கான ஆரம்ப கட்ட ஒப்பந்தங்களை இந்தியாவும், ஈரானும் மேற்கொண்டன. இந்தியா,பாகிஸ்தான் இடையே நட்புறவை ஏற்படுத்தும் அமைதி குழாய்ப் பாதையாக இது அமையும் என அப்போது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்திய மாற்றங்கள், இந்த குழாய்ப்பாதை பாதுகாப்பானதாக இருக்குமா? என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


மும்பையில் 2008-ம் ஆண்டு நடைபெற்ற தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் வழியாக குழாய்ப்பாதை அமைப்பது பாதுகாப்பானதாக இருக்காது என கருத்து தெரிவித்தது.


ஆரம்பத்தில் எரிவாயு விலை 10 லட்சம் கன அடி விலை 3.2 டாலராக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் 2007-ல் இது 4.93 டாலராக உயர்த்தப்பட்டது. இதற்கும் இந்தியா ஒப்புக் கொண்டது.கடந்த ஆண்டு மீண்டும் விலையை ஈரான் மாற்றியமைத்தது. இதன்படி 10 லட்சம் கன அடி எரிவாயு விலை 8.3 டாலராகவும், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 60 டாலராகவும் நிர்ணயிக்கப்பட்டது. இது தவிர, 10 லட்சம் கன அடி எரிவாயுவை அனுப்புவதற்கு போக்குவரத்து கட்டணமாக 1.1 டாலர் முதல் 1.2 டாலர் வரை செலுத்த வேண்டும் என்றும் ஈரான் நிபந்தனை விதித்துள்ளது.
Dinamani

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "குழாய் மூலம் எரிவாயு: ஈரானுடன் பேச்சு நடத்த இந்தியா முடிவு"

கருத்துரையிடுக