1 ஏப்., 2010

வருடம் முழுவதும் முட்டாளாக்கப்படும் மக்கள்!!

ஏப்ரல் 1ஆம் தேதி முட்டாள் தினம் என்றும் அன்று எவரும் யாரையும் பொய்கூறி ஏமாற்றி முட்டாளாக்கலாம் என்ற கருத்து நீண்டகாலமாக நிலவி வருகிறது.

ஏப்ரல் 1ஐ முட்டாள் தினமாகக் கொண்டாட எந்தவொரு முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுப் பின்னணியும் இல்லை. இந்தத் தினத்தின் பின்னணியில் கூறப்படும் கதைகளும், சம்பவங்களும் முட்டாள் தனமாகவே உள்ளன.

பாஸ்வெல் என்பவர்தான் முட்டாள்களுக்காக ஒரு தினத்தைக் கொண்டாட வேண்டும் என்ற யோசனையை வெளியிட்டார் எனக் கூறப்படுகிறது. ஏப்ரல் 1 ஆம் தேதி முட்டாள் தினக்கொண்டாட்டத்தில் எந்தப் படிப்பினையும் இல்லை அதனைப் பற்றி நாம் கவலைப்படவேண்டிய அவசியமும் இல்லை, என்றாலும் உலகின் பெரும்பான்மையான மக்கள் ஆதிக்க சக்திகளாலும், அரசுகளாலும், மனித இனத்திற்கு எதிரான கொள்கையுடையோராலும் தினந்தோறும் முட்டாளாக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள் என்பதை எவராலும் மறுக்கவியலாது என்பது உண்மை.

இன்றைய உலகில் மக்கள் எவ்வாறெல்லாம் முட்டாள்களாக்கப்பட்டு ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை நாம் பார்ப்போம். உலகின் ஏகாதிபத்திய வல்லரசாக தன்னைக் காட்டிக்கொள்ளும் அமெரிக்கா, ஈராக்கில் சதாம் ஹுசைன் பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கிறார். இது உலக மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகும் எனக்கூறி அமெரிக்க மக்களையும் உலக மக்களையும் நம்பவைத்து ஈராக் என்ற ஒரு சுதந்திரதேசத்தின் மீது அநியாயமாக போர் தொடுத்தது. கடைசியில் லட்சக்கணக்கான குழந்தைகள் உள்ளிட்ட ஈராக் குடிமக்களை கொன்று குவித்தும், ஆயிரக்கணக்கான பெண்களை விதவைகளாக்கியும், ஈராக்கை சின்னாப் பின்னப்படுத்தியது தான் மிச்சம். கடைசியில் பேரழிவு ஆயுதங்களும் இல்லை ஒரு மண்ணும் இல்லை என்றவுடன் கூலாக ஸாரி கூறினார் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ். அமெரிக்காவின் இந்த ஏகாதிபத்திய அநியாயத்தால் முட்டாளாக்கப்பட்டனர் அமெரிக்கர்களும், உலக நாட்டு மக்களும்.

தற்ப்பொழுது ஒபாமாவும் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் தோல்வியை விழுங்கவும் முடியாமல் வெளியேச் சொல்லவும் முடியாமல் அமெரிக்க மக்களையும் உலக நாடுகளையும் ஏமாற்றி முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்.

கெப்பல்ஸ் என்பவர் ஹிட்லரின் நெருங்கிய அமைச்சர்களில் ஒருவர். இவர் தொடர்ந்து பொய்யைக்கூறி அதனை உண்மை என மக்களை நம்பவைத்து விடுவார். இறுதியில் அவரது பெயரே கோயபல்ஸ் என்று மாறிவிட்டது. இன்று தொடர்ந்து பொய்க்கூறுபவர்களை கோயபல்ஸ் என்று குறிப்பிடுவது அதனால்தான்.

அதனைத்தான் அமெரிக்க ஆட்சியாளர்கள் 9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதல் விவகாரத்திலும் கூறிவருகிறார்கள். உள்ளூர் அரசியல் வாதிகளிலிருந்து உலகளாவிய அரசியல்வாதிகள் வரை தேர்தல் காலம் வந்துவிட்டாலே மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வழங்குவதும், பின்னர் ஆட்சிக்கு வந்துவிட்டால் கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிட்டு மக்களை முட்டாளாக்குவதும் தொடர்ந்து நடைபெற்றுவரும் வழக்கமாகிவிட்டது.

பாதிரிகள் முதல் சாமியார்கள் வரை வாழ்க்கைக்கு ஒவ்வாத துறவறத்தை மேற்க்கொள்வதாகக் கூறிக்கொண்டு மக்களை சுரண்டி முட்டாள்களாக்கி வருகின்றார்கள். இவர்களின் வண்டவாளங்கள் வெளியான பின்னரும் மக்கள் திருந்தினார்களா? என்றால் இல்லை. தாங்கள் தொடர்ந்து முட்டாள்களாக இருப்பதையே அவர்கள் விரும்புகின்றார்கள் போலும்.

இந்தியாவில் முஸ்லிம் சமூகம் தொடர்ந்து ஏமாற்றப்பட்டே வருகிறது. வெறும் ஓட்டு வங்கிகளாக மட்டும் கருதக்கூடிய ஒரு சமூகம். பாப்ரி மஸ்ஜித் பாசிச கயவர்களா இடித்துத் தள்ளப்பட்ட பொழுது காங்கிரஸ் அரசு பாப்ரி மஸ்ஜித் மீண்டும் கட்டப்படும் என வாக்குறுதியளித்து 18 ஆண்டுகள் முடியப்போகிறது. ஆனால் காங்கிரஸ் முஸ்லிம்களை ஏமாற்றியே வருகிறது.

முஸ்லிம்களின் சமூக பிற்போக்குத் தன்மையைக் குறித்து அரசால் நியமிக்கப்பட்ட பல்வேறு கமிஷன்களே முஸ்லிம்களின் பிற்பட்ட நிலையைக் குறித்து பரிந்துரைகளுடனான அறிக்கையை சமர்ப்பித்த பிறகும் அதுக்குறித்து வாய்திறக்காமல் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி வருகிறார்கள் ஆட்சியாளர்கள்.

தேசபக்தி வேடம் போட்டுக் கொண்டு அழிவு சக்தியான பாசிஸ்டுகள் மக்களை ஏமாற்றி முட்டாள்களாக்கிவிட்டு ஆட்சியையே பிடித்தார்கள். இவ்வாறு உலகம் முழுவது பெரும்பான்மையான மக்கள் வருடம் முழுவது ஏதாவது ஒருவகையில் முட்டாளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் ஏப்ரல்1 ஐ மட்டும் ஆண்டுதோறும் முட்டாள்தினமாக கருதுவதில் என்ன பயன்?

இஸ்லாம் என்ற வாழ்க்கைத் திட்டம் ஒரு சமூகத்தை ஏமாறாத ஏமாற்றப்படாத சமூகமாக மாற்றிக் காட்டியது அங்கு பொய்யிற்கு இடமில்லை. இதுக்குறித்து நபி(ஸல்..) அவர்கள் குறிப்பிடும்பொழுது: "உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும்; நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும. ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் ‘வாய்மையாளர்’ (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆகி விடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் ‘பெரும் பொய்யர்’ எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்." அறிவிப்பவர்:அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி), ஆதாரம்: புகாரி.

இத்தகைய எச்சரிக்கையை பெற்ற சமூகம் எவ்வாறு பொய்யைப் பேச இயலும்? பொய் பேசுபவது இரட்டை வேடம் போடும் நயவஞ்சகர்களின் அடையாளமாகவே காணப்பட்டது இஸ்லாமிய சமூகக்கட்டமைப்பில்.

மேலும் அந்த சமூகம் பிறரை ஏமாற்றவும் இல்லை பிறரால் ஏமாற்றப்படவுமில்லை. ஒரே பொந்தில் ஒரு நம்பிக்கையாளன் இரண்டு முறை கையை நுழைவிக்கமாட்டான் என்றார்கள் நபிகளார். ஆனால் இன்றைய சமூக சூழலை எடுத்துக்கொண்டால் முஸ்லிம்கள் தொடர்ந்து எதிரிகளால் ஏமாற்றப்பட்ட பிறகும் எவ்வித விழிப்புணர்வும் பெறாதவர்களாக இருந்து வருவது வருத்தத்திற்குரியதாகும்.

புத்திசாலி வாழ்வில் ஜெயிப்பான். முட்டாளோ தோற்று போவான். சின்ன விஷயத்துக்காக ஒருவனுக்கு கோபம் வருகிறதா? லாபம் தராத விஷயத்தைப் பற்றி ஒருவன் சதா பேசி கொண்டிருக்கிறானா?அர்த்தமில்லாமல் ஏதாவது கேள்வி அடிக்கடி கேட்டு கொண்டிருப்பானா? சந்திப்பவர்கள் அனைவரையும் ஒருவன் எந்த சந்தேகமுமில்லாமல் நம்பிவிடுகிறானா? விரோதிகள் யாரென்று கண்டுபிடிக்க முடியாமல் ஒருவன் முழிக்கிறானா? அவன் ஒரு 'முட்டாள்!' — இது ஒரு அரேபிய நாட்டு பொன்மொழி.

எனவே நாம் முட்டாள்கள் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டுமென்றால் நாம் விழிப்புணர்வுடன் இருந்தாலே சாத்தியமாகும்.!
விமர்சகன்


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வருடம் முழுவதும் முட்டாளாக்கப்படும் மக்கள்!!"

கருத்துரையிடுக