1 ஏப்., 2010

2011ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது!

டெல்லி:2011ம் ஆண்டுக்கான இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி இன்று தொடங்குகிறது.

இதுகுறித்து மத்திய உள்துறைச் செயலர் கோபால் கே.பிள்ளை கூறுகையில், 'பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்புத் திட்டம் வியாழக்கிழமை (நாளை) தொடங்குகிறது. 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெறும் இப்பணியில் 25 லட்சம் பேர் ஈடுபடுவார்கள். இதற்காக ரூ.2,209 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை விவரத்துடன் செல்போன், கம்ப்யூட்டர், இன்டர்நெட் வைத்துள்ளோரின் புள்ளி விவரங்களும் சேகரிக்கப்படுகிறது.

மேலும் வீடுகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கிறதா என்பது உள்ளிட்ட விவரங்களும், வீட்டிலுள்ள அனைவரது புகைப்படங்களும், கைரேகைகளும் பெறப்படும்.

உள்நாட்டுப் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்க இந்த விவரங்கள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் தற்போது உள்ள சுமார் 120 கோடி மக்கள் குறித்த விவரங்களை சேகரித்தபின் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கப்படும்.இதில் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் விவரமும் பதிவு செய்யப்படும். இப்படிப்பட்ட பதிவேடு தயார் செய்யப்படுவது இதுவே முதல் முறை.

இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.3539.24 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பதிவேடு தயாரானவுடன் ஒவ்வொருவருக்கும் ஓர் அடையாள எண் தரப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி 2 கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத்தில், தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்புக்கான விவரங்கள் சேகரிக்கப்படும்.

இப் பணி அந்தந்த மாநிலத்துக்கு ஏற்றவாறு ஏப்ரல் முதல் ஜூலை வரை பல்வேறு காலகட்டங்களில் 45 நாட்கள் மேற்கொள்ளப்படும். இந்த பணிகள் 640 மாவட்டங்களில் 5,767 தாலுகா, 7,742 நகரங்கள், 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நடைபெறும்.

இரண்டாவது கட்டத்தில், இவ்வாறு சேகரிக்கப்பட்ட விவரங்கள் 2011 பிப்ரவரி 9 முதல் 28 வரை தொகுக்கப்படும்.

கணக்கெடுப்பை துவக்கி வைக்கும் வகையில் இன்றைய தினம் குடியரசுத் தலைவரிடம் விவரங்கள் சேகரிக்கப்படும்' என்றார்.

இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் சந்திரமௌலி கூறுகையில், 'கடந்த 1872 முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. தற்போது நடத்தப்படும் 2011ம் ஆண்டுக்கான பணிகள் 15வது கணக்கெடுப்பாகும்.

சுதந்திரத்துக்குப் பின் 7வது கணக்கெடுப்பாகும். சுதந்திரப் போராட்டம், பாகிஸ்தான் பிரிவினை, போர், வெள்ளம், நிலநடுக்கம் போன்றவை நிகழ்ந்தபோதும் பத்தாண்டுக்கு ஒரு முறை தடைபடாமல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது' என்றார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "2011ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது!"

கருத்துரையிடுக