வாஷிங்டன்:செவ்வாய(Mars) மற்றும் வியாழன்(Jupiter) கிரகங்களுக்கு இடையே சுற்றி வரும் ஒரு விண் கல்லில்(Asteroid) ஏராளமான நீர் இருப்பது தெரியவந்துள்ளது.
சூரியனிலிருந்து 479 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் சுற்றி வரும் இந்த விண் கல்லை ஹவாய் தீவில் உள்ள இன்ப்ரா ரெட் டெலஸ்கோப்கள் மூலம் ஆராய்ந்ததில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் அப்ளைட் பிஸிக்ஸ் பிரிவைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் சென்ட்ரல் புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்தது.
24 தெமிஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த விண் கல்லில் நீர் மட்டுமின்றி கார்பன் மூலக்கூறுகள் உள்ளிட்ட சில உயிர் சத்துக்களும் இருப்பது தெரியவந்துள்ளது.
150 கிமீ அகலம் கொண்ட இந்த விண் கல்லில் 3ல் ஒரு பகுதி பனிக் கட்டியாகவே உள்ளதாகத் தெரிகிறது.சூரிய குடும்பத்துக்கு வெளியே (சரியாகச் சொன்னால் நெப்டியூன் கிரகத்தையும் தாண்டி) சுற்றும் எரி கற்களில் (comets) நீ்ர், பனிக் கட்டி இருப்பது வழக்கமானது தான். அவை சூயனுக்கு மிகத் தொலைவில் இருப்பதால் அதில் பனிக் கட்டிகள் இருப்பது வழக்கம்.
ஆனால், சூரிய குடும்பத்துக்குள் இரு கிரகங்களுக்கு இடையே சுற்றி வரும் விண் கல்லில் நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். இந்த விண்கல்லின் உள்ளே நீர் பனிக்கட்டியாக உறைந்துள்ளதாகவும், அதை மற்ற சிறிய கற்கள் மோதும்போது ஏற்பட்ட வெடிப்பில் நீர் வெளியே கசிந்துள்ளதாகவும் தெரிகிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
பூமிக்கு நீரும் உயிர்களும் வி்ண் கற்கள் மற்றும் எரி கற்கள் மூலம் தான் வந்திருக்க வேண்டும் என்ற தியரியை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கண்டுபிடிப்பு அமைந்துள்ளதாக நாஸா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமி உருவானபோது ஏற்பட்ட பயங்கரமான வெப்பத்தில் இங்கு நீரோ, உயிர்களோ தப்பியிருக்க வாய்ப்பில்லை. இதனால் நீரும் உயிரும் வெளியில் இருந்து வந்திருக்க வேண்டும் என்பது ஒரு கணிப்பாகும். எனவே இந்தக் கண்டுபிடிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த 24 தெமிஸ் கூட ஒரு எரி கல்லாகத் தான் இருக்க வேண்டும் என்றும், அது சூரிய குடும்பத்துக்குள் பயனித்தபோது மார்ஸ் மற்றும் ஜூபிடர் கிரகங்களுக்கு இடையிலான வட்டப் பாதையில் சி்க்கிக் கொண்டிருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது.
இந்த விண் கல்லில் சூரிய ஒளி எப்படி எதிரொளிக்கிறது என்பதை இன்ப்ரா ரெட் தொலைநோக்கிகள் மூலம் ஆய்வு செய்தபோது நீர், கார்பன் ஆகியவை இருப்பது தெரியவந்துள்ளது.
சூரிய ஒளிபடும்போது இதிலுள்ள நீர் ஆவியாகி வெளியேறுவதாகவும், இருளில் நீர் மீண்டும் உறைந்து இந்த விண் கல்லிலேயே தேங்குவதாகவும் தெரிய வந்துள்ளது.
source:thatstamil
0 கருத்துகள்: on "செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையே சுற்றி வரும் விண் கல்லில் நீர் இருப்பது கண்டுபிடிப்பு"
கருத்துரையிடுக