தரூர் என்ற பளபளப்பான அரசியல்வாதி எவருடைய பதிலாளாக செயல்படுகிறார் என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் துவக்கம் முதலே ஏற்பட்டிருந்தது.அந்த சந்தேகம் தவறில்லை என்பது தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகள் எடுத்தியம்புகின்றன. ஆனால் கொச்சிக்கு ஐ.பி.எல் அணியை கொண்டுவருவதற்கு பின்னணியிலிலுள்ள மர்மம் என்ன என்பதை பரிசோதிப்பதற்கு பதிலாக வழக்கம் போல் விவாதம் அரசியலில் முதலாளித்துவ சக்திகளின் விருப்பத்திற்கேற்றார் போல் மாறுவதைத்தான் காண்கிறோம்.
தரூருக்கெதிராக கடுமையான கண்டனங்களை பா.ஜ.க தெரிவிப்பதற்கு காரணம் அவர்களின் ரோல்மாடலான குஜராத் முஸ்லிம் இனப்படுகொலைப் புகழ் நரேந்திரமோடி இவ்விவகாரத்தில் பங்கு பெற்றதால்தானே தவிர வேறொன்றுமில்லை. வேறு சிலருக்கோ அமைச்சரவையில் பங்காளியான தேசியவாத காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைவர் சரத்பவாரையும் ஐ.பி.எல்லின் மும்பை தலைமையகத்தை ரெய்டு செய்ததன் மூலம் தொந்தரவுக்கு ஆளாக்கிய கோபம்.
பாராளுமன்றத்தில் நிதித்துறை மசோதா தாக்கல் செய்யும் வேளையில் எதிர்க்கட்சிகளுக்கெதிராக ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு உறுதுணையாக நிற்கவேண்டிய சூழலில் தரூரின் விவகாரம் விபரீத பலனை ஏற்படுத்திவிடும் என காங்கிரஸ் கட்சி கவலைக் கொள்கிறது.
ஆனால் சாதாரண இந்திய குடிமகன் அறியவேண்டியது வேறு சில காரியங்களாகும். அரிசி,பருப்பு,பால் போன்ற அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டிருக்கும் சூழலில் மனிதனை சோம்பலுக்கு ஆளாக்கும் ஒரு விளையாட்டின் பின்னால் நமது சிந்தனையை சுருக்கும் பின்னணியில் செயல்படுவோரின் விருப்பம் என்ன?
ஐ.பி.எல் அணியின் பின்னணியில் செயல்படும் நபர்கள் யார்? ஊடக பணமுதலையான ராபர்ட் மர்டோக்கின் மருமகன் உள்ளிட்டோருக்கு கொச்சி அணியில் ஏன் இத்தகையதொரு ஈடுபாடு? வெளிநாட்டு பண பரிமாற்றச்சட்டத்தின் அடிப்படையிலா இத்தகைய கோடிகள் இவ்விளையாட்டில் புரள்கிறது? சுனந்தா என்ற கஷ்மீரி சுந்தரியின் பங்கிற்கு 70 கோடி நிர்ணயித்தது கம்பெனிச்சட்டப்படி செல்லுபடியாகுமா? சசி தரூரின் மூன்றாம் தாரமாக வட்டமிடும் இப்பெண்மணி தரூரின் பினாமி என்ற குற்றச்சாட்டின் உண்மை நிலை என்ன? ஏராளமான கேள்விகள் எழுகின்றன.
ஆனால் பிரதமர் மன்மோகன்சிங் என்ற மூன்றாவது அம்பயரால் சசிதரூர் ரன் அவுட்டாகி விட்டதால் பிரச்சனைகள் முடிவடையாது. வாழ்க்கை வசதிகளில் பங்களாதேஷுக்கு அடுத்தபடியாக பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரு தேசத்தில் வாழும் பெரும்பான்மையான சமூகத்தின் வறுமையை ஃபோரும் சிக்ஸரும் அடித்து மறக்கடிக்க முயலும் கொடூரமான எண்ணத்தை எவ்வாறு எதிர்க்காமலிருக்க முடியும்?
உண்ணவேண்டும் உறங்கவேண்டும் என்ற மனோநிலை இன்று பெரும்பாலோருக்கு ஏற்பட்டுக்கொண்டிருக்ககூடிய சூழலில் நேரத்தைக் கொலைச் செய்யும் ஒரு விளையாட்டை பல வடிவங்களில் அவதாரமெடுக்கச் செய்வதன் நோக்கம் என்ன? என்பதைக் குறித்து நாம் ஆராய்ந்தே தீரவேண்டும்.
விமர்சகன்

0 கருத்துகள்: on "தரூர் ரன் அவுட் ஆகிவிட்டார் என்பது அல்ல பிரச்சனை"
கருத்துரையிடுக