29 ஏப்., 2010

ரேஷன் கடையில் மளிகைப் பொருட்கள் விற்பனையைத் தொடர்ந்து காய்கறிகள் விற்பனை

மளிகைப் பொருட்கள் விற்பனையைத் தொடர்ந்து, ரேஷன் கடைகளில் மலிவு விலையில் காய்கறி விற்பனையையும் ஆரம்பித்துள்ளது தமிழக அரசு.

சென்னையில் மட்டும் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சிக்கு பொதுமக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால், இதனை தமிழகம் முழுக்க விரிவுபடுத்தும் திட்டத்தில் உள்ளது தமிழக அரசு.

வெளி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக அன்றாடம் சமையலுக்கு அவசியமான வெங்காயம், தக்காளி, இஞ்சி போன்றவற்றின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.

ஏழை, நடுத்தர மக்கள் குறைந்த விலையில் காய்கறிகளை வாங்குவதற்கு வசதியாக சென்னையில் கூட்டுறவு ரேஷன் கடைகளில் காய்கறி விற்பனை நேற்று முதல் தொடங்கியது. சோதனை அடிப்படையில் முதல்கட்டமாக சென்னையில் உள்ள 117 டியுசிஎஸ், ரேஷன் கடைகளில் மட்டும் காய்கறி விற்கப்பட்டது.

விவசாயிகளிடம் இருந்து காய்கறிகளை நேரடியாக கொள்முதல் செய்து மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தரம் பார்த்து தேவையான அளவுகளில் பாக்கெட்களில் அடைத்து விற்கப்படுகிறது.

கியாஸ் விற்பனை மையங்கள், மண்ணெண்ணை விற்பனை நிலையங்களிலும் வெளி மார்க்கெட்டை விட பாதி விலையில் இந்த காய் கறிகள் விற்கப்படுகின்றன.

காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே காய்கறிகள் விற்கப்படும். ஒவ்வொரு விற்பனை நிலையத்தின் முன்பும் காய்கறிகளின் விலைப்பட்டியலும் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயம் தெரிய வந்ததுமே, பலரும் ரேஷன் கடைகளில் குவிந்துவிட்டனர். வெளிமார்க்கெட்டை விட கணிசமாக விலை குறைத்து விற்கப்படுவதால், காய்கறிகளை அள்ளிச் சென்றனர் மக்கள்.

வெளியில் கிலோ ரூ 34 ஆக விற்ற வெங்காயம் இங்கு ரூ 24-க்கும், வெளியில் கிலோ ரூ 26 வரை விற்கப்படும் தக்காளி இங்கே ரூ 16க்கும் விற்கப்பட்டது. மற்ற காய்கறிகளும் குறைந்த விலையில் தரப்படுகிறது.

இந்த முயற்சிக்கு மக்கள் அளித்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து, தமிழகம் முழுக்க இத்திட்டத்தை நகரப்பகுதிகளில் மட்டும் முதலில் நடைமுறைக்குக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளது தமிழக அரசின் சிவில் சப்ளைஸ் துறை.

இதன் மூலம் விவசாயிகளும் கணிசமாக லாபம் பார்க்க முடியும் என்பதால் இத்திட்டத்துக்கு பல மட்டத்திலும் ஆதரவு பெருகியுள்ளது.
source:thatstamil

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ரேஷன் கடையில் மளிகைப் பொருட்கள் விற்பனையைத் தொடர்ந்து காய்கறிகள் விற்பனை"

கருத்துரையிடுக