அத்தியாவசியப் பொருட்களின் விண்ணைத்தொடும் விலைவாசி உயர்வையும், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயர்வையும் கண்டித்து எதிர்கட்சியினர் முழு அழைப்பு விடுத்தனர்.
எதிர்கட்சிகளின் இவ்வழைப்பானது பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக கொண்டு வந்த கண்டனத் தீர்மானமும் மக்களின் ஆளுங்கட்சிக்கெதிரான ஆவேச உணர்வை வெளிக்காட்டுவதாக கூறப்பட்டாலும் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை கருத்தில் கொண்டுதான் இப்போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் அவை ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிக்கான செல்வாக்கு சரிந்து வருவதையே எடுத்தியம்பின. தேசிய அளவில் மக்கள் போராட்டம் அவசியமானது என்பதை மறுக்கவியலாது. ஆனால் எதற்காக என்பதுதான் கேள்வி? மக்களின் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களை விட அவர்கள் அனுபவித்துவரும் துயரங்கள்தான் முக்கியம்.
தேசப்பாதுகாப்பு என்றபெயரில் சிறுபான்மையினர், ஆதிவாசிகளின் அடிப்படை உரிமைகளை அடக்கி ஒடுக்கி வருகிறது மத்திய அரசு. மேலும் முதலாளித்துவத்தின் விருப்பங்களை நிறைவுச்செய்வதில் அதீத அக்கறையை காட்டுகிறது.
ஆனால் இத்தகைய மக்கள் விரோத கொள்கைகளுக்கெதிராக போராட்டங்கள் நடத்தும் துணிவும், உறுதியும் எதிர்கட்சிகளுக்கு கிடையாது. அரசுக்கெதிராக கூப்பாடும் எதிர்கட்சியினர் ஏதேனும் ஒரு வகையில் சர்ச்சைக்குரிய கொள்கைகளுக்கு பொறுப்பாளர்களாகவோ அல்லது பயனீட்டாளர்களாகவோ மாறுகின்றனர். இடதுசாரிகளும், பா.ஜ.கவும் ஆளும் மாநிலங்களில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அவர்களால் இயலவில்லை. டெல்லியிலிலுள்ள தேசிய தலைமை அறிவிக்கும் போராட்ட நிகழ்ச்சிகளைக் கூட தாங்கள் ஆளும் மாநிலங்களில் நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் உள்ளன இவை.
மத்திய அரசுக்கெதிரான கண்டனத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பல்வேறு நாடகக் காட்சிகள் அரங்கேறின. எத்தனை விதமான பல்டிகள். இதுவரை எதிர்ப்புடன் செயல்பட்ட மாயாவதி காங்கிரசுக்கு ஆதரவாக மாற சமாஜ்வாடியும், ராஷ்ட்ரீய ஜனதாதளமும் வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளவில்லை. சிபுசோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பிக்கள் பா.ஜ.க வின் காலை வாரிவிட்டு 'சாரி தெரியாமல் ஓட்டுப் போட்டோம்' எனக்கூறி நகைச்சுவையூட்டினர்.
மாயாவதியும், சிபுசோரனும் என்ன பிரதிபலனை இதன்மூலம் காங்கிரஸிடமிருந்து எதிர்பார்ப்பார்கள் என்பது தெரிந்த விஷயம்தான். அரசியல் கட்சிகளின் இத்தகைய ரகசிய கூட்டணிக்கு வெளியில் கூறமுடியாத காரணங்கள் இருக்கலாம்.
பாராளுமன்ற கூட்டத் தொடரின் முதல் பகுதியில் முழுமையாக ஆக்கிரமித்திருந்த மகளிர் இடஒதுக்கீடு குறித்த விவாதத்திற்கு முடிவு நெருங்கிவிட்டது. மிஷ்ரா கமிஷன் சிபாரிசுச் செய்த முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு விவகாரம் அஜண்டாவிலிருந்து மாற்றப்பட்டுவிட்டது. பின்னர் ஐ.பி.எல் உருவாக்கிய விவாதம். தற்பொழுது அரசியல் தலைவர்களின் டெலிபோனை ஒட்டுக்கேட்ட விவகாரம். இவ்விவகாரத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் கண்காணிப்பு உபகரணங்களை நிறுவி டெலிஃபோன் உரையாடல்கள் ஒட்டுக்கேட்பதுக் குறித்து எவ்வித பேச்சும் எழவில்லை.
முக்கியத்துவம் வாய்ந்த அல்லது இல்லாத பிரச்ச்னைகளை கிளப்பி பாராளுமன்றத்தை எப்பொழுதும் கலக மன்றமாகவே வைத்திருக்க காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் இடதுசாரிகளுக்கு மத்தியில் ஏதேனும் ரகசிய உடன்படிக்கைகள் இருக்கலாம். இதன் மூலம் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு கோரிக்கையையும், மகளிர் இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீட்டையும் குழித்தோண்டி புதைக்க அவர்களின் திட்டமாக இருக்கலாம்.
விமர்சகன்
0 கருத்துகள்: on "தோல்வியைத் தழுவிய போராட்டங்கள்"
கருத்துரையிடுக