10 மே, 2010

கோவா குண்டுவெடிப்பு வழக்கில் மே17-ல் குற்றப்பத்திரிகை தாக்கல்

பனாஜி:கோவா குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக மே 17-ம் தேதி குற்றப்பத்திரிகையை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தாக்கல் செய்யவுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி கோவாவில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 2 பேர் இறந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.

இந்த வழக்கு குறித்து கோவாவைச் சேர்ந்த என்ஐஏ மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
'இந்த வழக்கு தொடர்பாக தனஞ்செய் அஷ்டேக்கர், திலீப் மங்கோனர், வினாயக் பாட்டீல், வினய் தலேக்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது 180 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் வினாயக் பாட்டீல், வினய் தலேக்கர் ஆகியோருக்கு வாஸ்கோவிலுள்ள பெருநகர குற்றவியல் நீதிமன்றம் கடந்த வாரம் ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து 4 பேர் மீது வரும் 17-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.

வாஸ்கோ மற்றும் மர்மகோவாவிலுள்ள நீதிமன்றங்களில் இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்' என்றார் அவர்.

மர்மகோவா நகரில் நடந்த குண்டுவெடிப்பில்தான் 2 பேர் இறந்தனர். மேலும் மர்மகோவாவுக்கு 30 கிலோமீட்டர் தூரத்தில் சான்கோல் பகுதியில் 2 குண்டுகளை போலீஸார் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் சனதான் சன்ஸ்தா என்ற ஹிந்துத்துவ தீவிரவாத அமைப்பு சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்தது.

குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள். இந்த அமைப்பு ராம்நதி பகுதியிலுள்ள ஆஸ்ரமத்திலிருந்து தனது நடவடிக்கைகளை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கோவா குண்டுவெடிப்பு வழக்கில் மே17-ல் குற்றப்பத்திரிகை தாக்கல்"

கருத்துரையிடுக