டெல்அவீவ்:அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இஸ்ரேல் கையெழுத்திட வேண்டும் என்ற ஐ.நாவின் தீர்மானத்திற்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு நடைபெறும் அணு சக்தி மாநாட்டில் இஸ்ரேல் கலந்துக் கொள்ளாது எனவும் அவர் அறிவித்துள்ளார். ஐ.நாவின் தீர்மானத்தை அங்கீகரிக்க இயலாது என்றும், இந்நடவடிக்கை ஒருதலைபட்சமானது என்றும் நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
மேற்காசியாவை அணுஆயுதமில்லாத பகுதியாக மாற்ற முயற்சிப்பவர்கள் இப்பகுதியில் இதர முக்கிய அச்சுறுத்தல்களைக் குறித்து காணாததுபோல் நடிப்பதாக கூறும் நெதன்யாகு ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் குறித்து மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறார். நியூயார்க் நகரில் கூடிய ஐ.நா மாநாட்டில்தான் இஸ்ரேல் அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற தீர்மானம் 189 நாடுகள் அங்கீகரித்து நிறைவேற்றப்பட்டது. இதுத் தொடர்பாக விவாதிக்கவும், ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் வருகிற 2012 ஆம் ஆண்டு மாநாடு கூட்டவும் தீர்மானிக்கப்பட்டது.
அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா ஆகிய நாடுகளின் பெயர்களை சுட்டிக் காட்டாமல் இஸ்ரேலின் பெயரை மட்டும் கூறியதன் பின்னணி ஒருதலைபட்சமானது என இஸ்ரேல் குற்றஞ்சாட்டுகிறது. 200க்கும் மேற்பட்ட அணுஆயுதங்களை கைவசம் வைத்திருக்கும் இஸ்ரேல் கடந்த 40 வருடங்களாக அமெரிக்காவின் ஆதரவினால் ஐ.நாவின் முயற்சிகளுக்கு தடைப்போட்டு வருகிறது.
ஈரானுக்கெதிராக நடவடிக்கை எடுக்க அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் கோரிவரும் வேளையில்தான் அணுஆயுதமில்லாத மேற்காசியா திட்டத்திற்கு ஐ.நா தயாரானது.
ஐ.நாவின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்காவின் செயல் இஸ்ரேலை தனிமைப்படுத்திவிடக் கூடாது என இஸ்ரேல் அமெரிக்காவிற்கு நினைவூட்டியது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "2012 ஆம் ஆண்டு அணு சக்தி மாநாட்டில் பங்கெடுக்காதாம் இஸ்ரேல்"
கருத்துரையிடுக