புதுடெல்லி:டெல்லியில் பிரசித்திப் பெற்ற பல்கலைக்கழகமான ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்திற்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்குவதுத் தொடர்பாக மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கும், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபலுக்குமிடையே வெளிப்படையான போராட்டம் நடக்கிறது.
ஜாமியாவுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க வேண்டும் என்று சல்மான் கூறுகிறார். ஆனால் கூடாது என்கிறார் கபில் சிபல்.
ஜாமியாவுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்குவது தொடர்பான விவகாரம் தற்பொழுது சிறுபான்மை கல்வி கமிஷனுக்கு முன்னால் உள்ளது. இவ்விஷயத்தில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கருத்தைக் கேட்கும் பொழுது ஆதரவான கருத்தை தெரிவிக்கவேண்டும் என்று சல்மான் குர்ஷித் கபில்சிபலுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இருவருக்குமிடையேயான போராட்டம் துவங்கியது. சல்மானின் கருத்திற்கு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளிப்படையாக முரண்பட்டதோடு அக்கடிதத்தை பத்திரிகைகளுக்கும் வழங்கியது.
அமைச்சர்களுக்கிடையேயான கடிதத் தொடர்புகளை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளிப்படுத்தியதுக் குறித்து சல்மான் குர்ஷித் எதிர்ப்பு தெரிவித்தார். இப்பிரச்சனை தற்பொழுது பிரதமருக்கு முன்னால் உள்ளதாகவும் அவர் தனக்கு ஆதரவான முடிவை எடுப்பார் என சல்மான் கூறுகிறார். 1920ம் ஆண்டு துவங்கப்பட்ட ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் சிறுபான்மை அந்தஸ்திற்கு தகுதியானது என்பதற்கு ஏராளமான காரணங்களை சுட்டிக்காட்டி சல்மான் குர்ஷித் கடிதம் எழுதியிருந்தார்.
சிறுபான்மை அந்தஸ்து வழங்கும் பொழுது மொத்த இடங்களில் 50 சதவீத இடங்களை சிறுபான்மை மக்களுக்கு வழங்கவேண்டி வரும். ஆனால் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இதனை எதிர்க்கிறது. ஜாமியாவின் வரலாற்று சிறப்பு அந்தஸ்து தொடரட்டும் என்பது கபில் சிபலின் நிலைப்பாடு.
சிறுபான்மை அமைப்புகளோ, சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த நபர்களோ நடத்தும் கல்வி நிறுவனத்திற்குதான் சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்படும். ஜாமியா மில்லியாவும் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவரால் துவங்கப்பட்டதால் அதற்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கவேண்டும் என்பது பல்கலைக்கழகத்தின் வாதமாகும்.
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்குவதுத் தொடர்பான வழக்கு தற்பொழுது சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பு எதுவாகயிருந்தாலும் அது ஜாமியா மில்லியாவின் சிறுபான்மை அந்தஸ்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஜாமியாவுக்கு சிறுபான்மை அந்தஸ்து:சல்மானுக்கும், சிபலுக்குமிடையே வெளிப்படையான போராட்டம்"
கருத்துரையிடுக