20 மே, 2010

பாபர் மசூதி வழக்கில் அத்வானி உள்ளிட்ட 21 பேருக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கைகளைத் தொடர அனுமதியளிக்க முடியாது: அலகாபாத் உயர்நீதிமன்றம்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்பட 21 பேருக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கைகளைத் தொடர அனுமதியளிக்க முடியாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது.

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி இடிக்கப்பட்டது தொடர்பாக, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உள்பட 21 பேர் மீது கிரிமினல் வழக்குத் தொடரப்பட்டது.

பாரதீய ஜனதா உள்பட பல்வேறு ஹிந்து அமைப்புக்களைச் சேர்ந்த கரசேவகர்கள் கூடியிருந்த நேரத்தில், பாபர் மசூதியை இடிக்க அவர்களைத் தூண்டினார்கள் என்பது உள்பட அந்தத் தலைவர்கள் மீது சிபிஐ எனப்படு்ம மத்திய புலனாய்வுத்துறை பல வழக்குகளைத் தொடர்ந்தது.

ஆனால், அவர்களுக்கு எதிரான கிரிமினல் நடவடிக்கைகளைத் தொடர ஆதாரம் இல்லை என்று கூறி சிபிஐ மனுவை சிறப்பு நீதிமன்றம் கடந்த 2001-ம் ஆண்டு தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து, சிபிஐ சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மனு மீது, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை தீர்ப்பு வழங்கியது.

குற்றத்தை கண்டுபிடிக்க முடியவில்லை
சிறப்பு நீதிமன்றம் பின்பற்றிய சட்ட நடைமுறைகள் உள்பட எந்த அம்சத்தின் மீதும் குற்றம் கண்டுபிடிக்க முடியவில்லை என்று நீதிபதி அலோக் குமார் தெரிவித்தார்.

விசாரணை முறைகள் தொடர்பாக எந்தக்குறையும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், 2001-ம் ஆண்டு மே 4-ம் தேதி சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தலையிடுவதற்கு உயர்நீதிமன்றத்துக்கு எந்த அவசியமும் இருப்பதாகத் தெரியவில்லை என்று நீதிபதி தெரிவித்தார்.

விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கல், சிவசேனா தலைவர் பால்தாக்கரே உள்பட 21 பேர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இல்லை என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாபர் மசூதி வழக்கில் அத்வானி உள்ளிட்ட 21 பேருக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கைகளைத் தொடர அனுமதியளிக்க முடியாது: அலகாபாத் உயர்நீதிமன்றம்"

கருத்துரையிடுக