முஸஃபர் நகர்:சில ஐரோப்பிய நாடுகளில் புர்கா அணிய அந்நாட்டு அரசுகள் தடை விதிப்பதற்கு இந்தியாவின் பிரசித்திப் பெற்ற மதரஸாவான தேவ்பந்த் தாருல் உலூம் மதரஸாவின் துணைவேந்தர் மவ்லானா அப்துல் கலீக் மத்ராஸி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டு அரசு கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் புர்கா அணியத் தடைவிதித்தது. தற்பொழுது பொது இடத்திலும் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடைவிதித்ததோடு புர்கா அணிபவர்களுக்கு அபராதமும் விதித்து வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் டென்மார்க் வலதுசாரி அரசு புர்காவும், நிகாபும் டென்மார்க் நாட்டின் மதிப்பீட்டிற்கு எதிரானவை எனக்கூறியுள்ளது. கடந்த வியாழக்கிழமை பெல்ஜியம் அரசின் கீழ் அவையான பாராளுமன்றம் பொதுஇடத்தில் புர்கா மாதிரி இஸ்லாமிய உடையை அணிய தடை விதித்துள்ளது. ஆனால் இந்த சட்டம் செனட்டில் இதுவரை நிறைவேறவில்லை.
இதுத்தொடர்பாக இந்தியாவின் பாரம்பரியமிக்க மதரஸாவான உ.பி மாநிலம் தேவ்பந்தில் செயல்படும் தாருல் உலூமின் துணைவேந்தர் மவ்லானா அப்துல் கலீக் மத்ராஸி கூறுகையில், "இந்தச் சட்டம் ஜனநாயகத்திற்கும், மதசார்பற்ற தன்மைக்கும் எதிரானதாகும். சில இஸ்லாத்தின் எதிரிகள் இந்த நாடுகளில் முஸ்லிம்களுக்கான மத சுதந்திரத்திற்கு கட்டுப்பாடு விதிக்க முயல்கிறார்கள்" என்றார் அவர்.
Source: Times of India
0 கருத்துகள்: on "ஐரோப்பிய நாடுகளில் புர்காவிற்கு தடை: தேவ்பந்த் தாருல் உலூம் கண்டனம்"
கருத்துரையிடுக