ஹைதராபாத்:2007 ஆம் ஆண்டில் மக்கா மஸ்ஜிதில் நடைபெற்ற குண்டு வெடிப்பைக் குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று ஹைதராபாத்தில் முஸ்லிம் அமைப்புகள் கோரியுள்ளன.
மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பும், அஜ்மீர் தர்காவில் நடந்த குண்டுவெடிப்பிற்குமிடையே தொடர்பு உள்ளது என சி.பி.ஐ கூறியுள்ள சூழலில்தான் முஸ்லிம் அமைப்புகள் இக்கோரிக்கையை விடுத்துள்ளன.
ஹைதராபாத்தில் மக்கா மஸ்ஜிதில் நடைபெற்ற குண்டுவெடிப்பிற்கும், அஜ்மீர் ஹாஜா முஈனுத்தீன் ஜிஸ்தி தர்காவில் நடைபெற்ற குண்டுவெடிப்பிற்கும் பின்னணியில் செயல்பட்டது ஒரே தீவிரவாத இயக்கம் தான் என்பது ஏ.டி.எஸ் மற்றும் சி.பி.ஐக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
2007 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி அஜ்மீர் தர்காவில் நடந்த குண்டுவெடிப்புடன் தொடர்புடைய ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கமான அபினவ் பாரத்தின் தேவேந்திர குப்தா, சந்திரசேகர் ஆகியோரை ஏ.டி.எஸ் கைதுச் செய்ததோடு சி.பி.ஐக்கு மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு தொடர்பாக மேலும் தகவல்கள் கிடைத்தன.
அபினவ் பாரத்தின் முக்கிய உறுப்பினர்களான கர்னல் புரோகித், சன்னியாசினி பிரக்யா சிங் தாக்கூர் ஆகியோரின் பங்கைக் குறித்து பரிசோதிக்கும் வகையில் சி.பி.ஐ மீண்டும் புலனாய்வு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
2008 ஆம் ஆண்டு மலேகானில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு காரணமானவர்கள் தான் இருவரும். உண்மையை வெளிக்கொண்டுவர விரிவான விசாரணையை மேற்கொள்ள ஹைதராபாத்தில் முக்கிய முஸ்லிம் அரசியல் கட்சியான மஜ்லிஸே இத்திஹாதில் முஸ்லிமீன் கோரியுள்ளது. உண்மையான குற்றவாளிகளுக்கு எதிராக மிருதுவான அணுகுமுறையை காண்பிப்பதால் வழக்கில் கடந்த 3 ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என எம்.ஐ.எம் தலைவர்கள் குற்றஞ்சாட்டினர்.
ஹிந்து பயங்கரவாத இயக்கங்களின் பங்கைக் குறித்து விசாரிக்கவோ, பிரக்யாசிங் தாக்கூர் மற்றும் கர்னல் புரோகித் ஆகியோரை விசாரணைச் செய்யவோ ஆத்மார்த்தமான எவ்வித முயற்சிகளும் நடைபெறவில்லை. வழக்கில் புனர் விசாரணை வேண்டும் என சமூக-மத அமைப்பான தஃமீரே மில்லத்தும் வேண்டுகோள் விடுத்துள்ளது. மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு நிகழ்ந்து ஐந்து நிமிடத்திற்குள்ளாகவே ஹர்கத்துல் முஜாஹிதீன் என்ற அமைப்பும் இன்னும் சில வெளிநாட்டு அமைப்புகள் மீதும் குற்றஞ்சுமத்தினர் அதிகாரிகள்.
ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கங்கள் புலனாய்வின் எல்லைக்குள் வராமலிருக்க சில அதிகாரிகள் அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர் என தஃமீரே மில்லத் குற்றஞ்சாட்டுகிறது. முக்கிய குற்றவாளிகள் இரண்டுபேர் இறந்து போனதால் வழக்கு நிலைத்துவிட்டதாக கடந்த ஆண்டு ஹைதராபாத்திற்கு வந்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருந்தார்.
குண்டுவெடிப்பு நிகழ்ந்து சில தினங்களுக்குள்ளாக முக்கிய குற்றவாளி எனக் குற்றஞ்சாட்டப்பட்ட ஷாஹித் பிலால் பாகிஸ்தானில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார் என போலீஸ் கூறியது. ஹைதராபாத்தைச் சார்ந்த ஷாஹித் ஹுஜி என்ற தீவிரவாத அமைப்பைச் சார்ந்தவர் என்பது போலீசின் கூற்றாகும்.
லும்பினி பார்க்கிலும், கோகுல் சாட்டிலும் நடந்த குண்டுவெடிப்புகள் மக்கா மஸ்ஜிதில் நடந்த தாக்குதலுக்கு பழிவாங்கியதாகும் என போலீஸ் கட்டுக்கதையை பரப்பியதாக தஃமீரே மில்லத் குற்றஞ்சாட்டுகிறது.
மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புடன் தொடர்புடையவர்கள் எனக் குற்றஞ்சாட்டி முஸ்லிம் இளைஞர்களை கைதுச்செய்து சித்திரவதைச் செய்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென முஸ்லிம் அமைப்புகள் கோரியுள்ளன. அப்பாவிகளான முஸ்லிம் இளைஞர்களை உண்மைக் கண்டறியும் சோதனைக்கும் போலீஸ் உட்படுத்தியதாக முஸ்லிம் அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு: மீண்டும் விசாரிக்க முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை"
கருத்துரையிடுக