மேற்குவங்காளத்தில் ஆளும் மார்க்சிய கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி அரசு நந்திக்கிராமிலும், சிங்கூரிலும் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் மண்ணின் மைந்தர்களின் நிலங்களை ஆக்கிரமித்து கைப்பற்றி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்கு முயன்றபொழுது மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டத்தை நடத்தினர்.
மக்களின் உரிமைப் போராட்டத்தை பாட்டாளிகளின் தோழனாக வேடமிடும் கம்யூனிச அரசு மிகக்கடுமையான முறையில் அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டு நசுக்கியது.
பெண்களுக்கெதிரான பாலியல் பலாத்காரங்களும் தாக்குதல்களும் நிகழ்ந்தேறின. அரச பயங்கரவாதத்திற்கு தாங்களும் சளைத்தவர்களல்லர் என்பதை காமரேட்டுகள் நிரூபித்தனர்.
இத்தகையதொரு சூழலை கம்யூனிஸ்டுகள் தாங்கள் ஆளும் கேரள மாநிலத்திலும் செயல்படுத்த தேர்ந்தெடுத்த இடம் தான் கோழிக்கோடு மாவட்டத்திலிலுள்ள கினலூர் என்றதொரு சிறிய கிராமம். இந்த சிறிய கிராமம் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறியது கடந்த மே மாதம் 6ஆம் தேதியாகும். அன்று காலையில் போலீஸ் படைகள் புடை சூழ அரசு அதிகாரிகள் கினலூரை மல்லிக்கடவு என்ற இடத்துடன் இணைக்கும் 30 மீட்டர் அகலம் கொண்ட விரிவான நால்வழிச் சாலையொன்றை நிர்மாணிப்பதற்கு சர்வே எடுக்க வந்தனர்.
அரசின் இத்தகையதொரு எதேச்சதிகார செயலை புரிந்துக்கொண்ட கினலூர் கிராம மக்கள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். விரிவான சாலையால் தங்களின் வீடுகள் இடிக்கப்படும் என்றும் தாங்கள் வாழ்வதற்கு இடமில்லாத சூழலுக்கு தள்ளப்படுவோம் எனக்கூறி ஒன்றிணைந்து அதிகாரிகளுக்கெதிராக போராட்டத்தை துவக்கினர்.
இதில் வேதனை என்னவென்றால் அரசு சாலை நிர்மாணிக்கும் பொழுது பொதுமக்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு நஷ்டஈட்டைக் கூட அறிவிக்கவில்லை என்பதாகும்.
இந்நிலையில் பெண்களும், குழந்தைகளும், வயோதிகர்களும் கூட இப்போராட்டத்தில் கலந்துக் கொண்டனர். போராட்டக்காரர்களின் கோரிக்கையை அதிகாரிகள் செவியேற்காததால் போலீஸிற்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் உருவானது.
இதனைத் தொடர்ந்து போலீஸ் கண்ணீர் குண்டுகளையும், கிரேனேடுகளையும் வீசியது. அப்பொழுது பொதுமக்கள் கற்களையும், பசுவின் சாணநீரையும் போலீசாரை நோக்கி வீச போலீஸ் தனது காட்டுமிராண்டித்தனத்தை கட்டவிழ்த்துவிட்டது.
கையில் கிடைத்த குழந்தைகளையும், பெண்களையும், ஆண்களையும் எல்லாம் நையப்புடைத்தது. வீடுகளுக்குள் அத்துமீறிச் சென்று கண்ணில் கண்டவர்களையெல்லாம் பிடித்துச் சென்றது. இம்மோதலில் காயமடைந்த போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் போலீசின் தாக்குதலில் கடுமையான காயமடைந்த பொதுமக்கள் மருத்துவமனைக்கு செல்ல பயப்படுகின்றனர். காரணம் போலீஸ் தங்களை கைதுச் செய்துவிடும் என்ற பய உணர்வே காரணமாகும்.
நால்வழிச் சாலையை நிர்மாணிப்பதற்கான காரணம் என்ன?
கேரள மாநில அரசு இப்பகுதியில் தொழிற்சாலைகளை ஏற்படுத்துவதற்காக வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. மலேசிய நிறுவனம் ஒன்றுடன் 'சாட்டிலைட் சிட்டி' திட்டத்திற்கு ஒப்பந்தமிடப்பட்டது. பின்னர் இத்திட்டம் அப்பகுதியின் சாலையின் மோசமான நிலவரத்தால் கைவிடப்பட்டது என கேரள மாநில தொழில் அமைச்சர் கூறுகிறார். இருந்தபோதிலும் ரியல் எஸ்டேட் மாஃபியா கும்பல் கினலூரை சுற்றியுள்ள நிலங்களை வளைத்துப் போட்டு விலையை கடுமையாக ஏற்றி விற்க ஆரம்பித்தது. சாலையை நிர்மாணிக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்த துவங்கியது.
கடைசியாக கிடைத்த தகவலின்படி ஒரு 'ஷு' கம்பெனி துவங்கவிருப்பதாக தகவல்.
கினலூர் மக்கள் இதனைக் குறித்து தெரிவிக்கும் பொழுது, 'தாங்கள் அரசின் தொழில் முன்னேற்ற திட்டத்தை எதிர்க்கவில்லை என்றும், நால் வழிச்சாலைத் திட்டத்தை தான் எதிர்ப்பதாகவும் தெரிவிக்கின்றனர். ஏனெனில் அச்சாலைப் போடப்பட்டால் தங்களின் விவசாய நிலங்களும், வீடுகளும் இல்லாமலாகும் என அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் அவர்கள் நால்வழிச் சாலைக்கு வேறு வழியையும் பரிந்துரைத்துள்ளனர். ஆனால் கம்யூனிச அரசோ அதற்கு சம்மதிக்கவில்லை.
மக்களின் போராட்டத்தை தீவிரவாதத்துடன் தொடர்பு படுத்திய கம்யூனிச அரசின் நயவஞ்சகத்தனம்
கேரள கம்யூனிச அரசின் தொழில் அமைச்சர் கினலூர் சம்பவத்தின் பின்னணியில் முஸ்லிம் மதத்தீவிரவாதிகள் உள்ளதாக புழுகியுள்ளார்.
கினலூர் போராட்டத்தில் முஸ்லிம் லீக், காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். 'சமர சமிதி' என்ற அமைப்பின் மூலம்தான் அனைத்து மக்களும் கலந்துக் கொண்ட போராட்டம் நடைபெற்றுள்ளது.
அரச பயங்கரவாதத்தை மறைப்பதற்காக நயவஞ்சகத்தனமான முறையில் கம்யூனிச அரசின் அமைச்சர் முஸ்லிம் தீவிரவாதத்தின் மீது பழிபோட்டு தப்பிக்க முயல்கிறார். இதற்கு கேரள மாநில முஸ்லிம் லீக்கின் பொதுச்செயலாளர் பி.கே.குஞ்சாலிக்குட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை இணை அமைச்சராகயிருக்கும் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கம்யூனிச அமைச்சரின் தீவிரவாதக் குற்றச்சாட்ட்டுப் பற்றிக் கூறுகையில், 'மத்திய அரசுக்கு இதுத்தொடர்பாக எவ்வித உளவுத்துறை தகவலும் வரவில்லை’ என்றார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ஜமாஅத்தே இஸ்லாமியின் 'சோலிடாரிட்டி முவ்மெண்ட்' ஆகிய முஸ்லிம் இயக்கங்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றதை வைத்து ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் தீவிரவாத முத்திரைக் குத்தப் பார்க்கிறார் கேரள அமைச்சர்.
இந்நிலையில் கேரள மாநில பெண்கள் கமிஷனின் தலைவராகயிருக்கும் ஸ்ரீதேவி என்பவர் அரசு பயங்கரவாதத்தை ஆதரித்து பேட்டியளித்துள்ளார். அதில் அவர், 'அரசின் தொழில் முன்னேற்றத்தை இவர்கள் ஏன் தடைச் செய்கிறார்கள். இவர்களேச் சென்று போலீசாரிடம் அடிவாங்கியுள்ளனர்'. என்று பாதிக்கப்பட்டவர்களை இழிவுப்படுத்தியுள்ளார். இதற்கு தேசிய பெண்கள் முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
கினலூரை நேரில் பார்வையிடச் சென்ற மனித உரிமை ஆர்வலர்களைக் கொண்ட குழு அரசின் இத்தகைய எதேச்சதிகாரப் போக்கிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 'தொழில் அமைச்சரும், மாவட்ட கலெக்டரும் உண்மையை புரிந்துக் கொள்ளவேண்டும்.
தொழில் முன்னேற்றம் என்பது இயற்கையையும், மக்களின் வாழ்விடங்களையும் அழித்துவிட்டு வியாபார முதலைகள், சுயநல அரசியல் வாதிகள், அதிகாரிகளின் விருப்பத்திற்கு தாரைவார்ப்பதல்ல' என்று இவர்கள் கூறியுள்ளனர்.
அரசு உடனே இதற்கு தெளிவான விளக்கம் அளிக்கவேண்டும். மேலும் இப்பகுதியில் அமைதி ஏற்படவும், இப்பகுதி மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறவேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
'NH17 சம்யுக்த சமிதி' என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு போலீஸ் அராஜகத்திற்கு நீதிவிசாரணை நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளமாநில எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸின் உம்மன்சாண்டி கம்யூனிச அரசின் காவல்துறை கினலூரில் நடத்திய அராஜகத்தை நந்திக்கிராம் மற்றும் சிங்கூருக்கு ஒப்பிட்டுள்ளார்.
இப்பொழுது கேரளாவின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது சிறிய கிராமமான கினாலூர். மக்கள் எப்பொழுதும் முன்னேற்றத்திற்கு எதிரானவர்களல்லர். ஆனால் முன்னேற்றம் வளர்ச்சி என்ற பெயரால் அவர்களின் வாழ்விடங்களை விட்டு துரத்துவதும், பணி லம் படைத்தோருக்கும் அரசியல்வாதிகளுக்கும் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியின் பலன் சென்றடைவதையும் தான் எதிர்க்கிறார்கள்.
0 கருத்துகள்: on "கினலூர்-கேரளாவின் நந்திக்கிராம்?"
கருத்துரையிடுக