23 மே, 2010

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதலாண்டு நிறைவுறும் வேளையில்...

ஆந்திராவில் 'லைலா' புயல் கரை கடக்கும் வேளையில்தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதலாம் ஆண்டு நிறைவு தினமும் வந்தது.

ஒரு வகையில் பார்த்தால் ஐ.மு கூட்டணி அரசின் கடந்த ஓர் ஆண்டும் புயல் வீசி ஓய்ந்த கதைதான். அரசியல் பார்வையாளர்கள் கடந்த ஐ.மு அரசின் ஓர் ஆண்டு நிறைவையும் தற்போதைய ஐ.மு அரசின் ஓர் ஆண்டு நிறைவுறுவதையும் சற்று வித்தியாசமாகவே கணிக்கின்றனர்.

ஐ.மு அரசின் சாரதி தற்பொழுதும் சர்தார்ஜீ தான். அவருடைய அந்தரங்கச் செயலாளரும் நாயர்சாப்தான். இரண்டு பேருக்குமே இக்காலக்கட்டத்தில் 6 வயது கூடியுள்ளது. ஆனால் நடை, உடை, பாவனைகளிலோ குணங்களிலோ எந்த மாற்றமும் இல்லை.

கடந்த ஒரு வருடத்தில் சர்தார்ஜீக்கு ஒரு இதய அறுவைசிகிட்சை நடந்தது. நாயர்சாப்பின் அவ்வப்போது செல்லும் குருவாயூர் பயணத்திற்கும் குறைவில்லை. மற்றவகையில் எந்தவித மாற்றமும் இல்லை எனக்கூறலாம். ஆனால் ஆட்சியில்...குழப்பம்தான் மிச்சம்.

என்ன குழப்பம்? மன்மோகன்சிங்கின் முள்கிரீடத்தை தட்டிப் பறிப்பதற்கான சதிவேலைகளா? அதற்கு தற்பொழுது ராகுல் தயாரில்லை. ஏனெனில் 40 வயதை நெருங்கிய பொழுதும் திருமணம் புரியாமலிருக்கும் அவர் இதில் கவனம் செலுத்தமாட்டார் என நம்புவோம். மேடம் தீர்மானிப்பதுதான் அங்கு முடிவு. ஆகவே மன்மோகன்சிங்கிற்கு தற்பொழுது அதுபற்றிய எக்கவலையும் தேவையில்லை.

நாம் இங்கு குறிப்பிடுவது அரசின் நடவடிக்கைகளினால் ஏற்படும் குழப்பத்தைப் பற்றித்தான். இல்லாத ஜிஹாத் தீவிரவாதத்தையும், அரசு பயங்கரவாதத்தினால் உருவான மாவோ தீவிரவாதத்தையும் பற்றி ப.சிதம்பரம் செட்டியார் பேசிக்கொண்டிருக்கும் வேளையில்தான் ஹிந்துத்துவா பயங்கரவாதம் முளைத்து விருட்சமாக மாறி தேசத்தின் அச்சுறுத்தலாகிவிட்டது.

இப்பொழுது எந்த தீவிரவாதத்தைப் பற்றி பேசுவது என்று ப.சி குழம்பிப்போய் உள்ளார். காட்டு வேட்டையோ அல்லது பசுமை வேட்டையோ ஆனால் மனித வேட்டையை பழங்குடி மக்கள் மீது நடத்தியதால் ஏற்பட்ட எதிர்விளைவுதான் 78 சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் உயிர்களை பறிக்கொடுக்க நேர்ந்த சம்பவம்.

பிரச்சனையின் ஆணிவேரைக் குறித்து சிந்திக்காமல் மேலும் மேலும் ஆணி அடிக்க முயல்கிறார்கள் ஆட்சியாளர்கள். தற்பொழுது விமானத் தாக்குதலைக் குறித்து சிந்திக்கும் வேளையில் இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தும் செய்தி ராம் மோகன் கமிட்டி மூலம் வந்தது.

தண்டேவாடா தாக்குதலைக் குறித்து விசாரணைச்செய்ய நியமிக்கப்பட்ட முன்னாள் பி.எஸ்.எஃப் இயக்குநர் ராம் மோகன் அளித்த அறிக்கையில் சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள் மாவோயிஸ்டுகளுக்கு பயந்து ரோந்து செல்லாமலேயே சென்றதாக போலி ஆவணங்களை தயாரித்துள்ளனர் என்று கண்டறிந்துள்ளார்.

மேலும் சி.ஆர்.பி.எஃப்பின் ஆபீசரிடமிருந்து தொலைந்து போன வயர்லெஸ்ஸைக் குறித்து அச்சம் தெரிவிக்கிறார். இவ்வாறிருக்கிறது உள்துறை அமைச்சகத்தின் லட்சணம்.

ப.சியை விட தினமும் நான்கு தடவை உடை மாற்றும் பழைய நபர் பரவாயில்லை என தற்பொழுது பலரும் முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

எதிர்கட்சியான பா.ஜ.கவுக்கு வாய்திறக்க முடியவில்லை. ஏனெனில் சட்டீஷ்கரில் அவாள்களின் ஆட்சியல்லவா நடக்கிறது.

அமெரிக்காவில் ப்ளேபாயாக திரிந்த சசி தரூரை பாராளுமன்ற ஹவுஸ் பாயாக மாற்ற முயற்சித்து தோல்வியை தழுவியுள்ளது மன்மோகன்சிங் அரசு.

காஷ்மீரத்து சுந்தரியிடம் மையல்கொண்டு மனதை பறிகொடுத்தவருக்கு இறுதியில் தனது பதவியையே பறிகொடுக்க வேண்டியதாயிற்று.

ஐ.பி.எல்லின் பெயரால் சரத்பவார் மற்றும் பிரஃபுல் பட்டேலின் புத்திரிகள் போட்ட ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனாலும் ஆட்சியை பாதுகாக்க அடக்கி வாசிக்கிறார் மன்மோகன்.

வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை இந்தியாவுக்கு இறக்குமதிச் செய்யவும், கல்வியில் தாராளமயத்தை அனுமதிக்கவும் கபில் சிபல் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் பொழுதுதான் இந்திய மருத்துவக்கவுன்சில் தலைவரின் ஊழல் முடை நாற்றம் வீச ஆரம்பித்தது.

எகிப்தின் ஷரமுல் ஷேக்கில் பிரதமர் மன்மோகன்சிங்கை பாக்.பிரதமர் கிலானி சந்தித்துபேசிய வேளையில் பாலுசிஸ்தானில் இந்தியாவின் 'ரா' கிளர்ச்சியாளர்களுக்கு உதவுகிறது என்பதற்கான ஆதாரத்தை சமர்பித்ததாக கூறப்படுகிறது.

இத்தகவல் கிலானிக்கு எப்படி தெரிந்தது என்று மன்மோகன் அன்று குழம்பியிருப்பார். இப்பொழுது விடை கிடைத்திருக்கும் மாதுரி குப்தா போன்றவர்கள் இருக்கும்பொழுது கிலானிக்கு என்ன கவலை? என்று.

கடந்த இரண்டுமாதங்களாக பூணூலின் பின்னால் ஒளிந்திருந்த பலருடைய வேட்டிகளும் அவிழ்ந்து விழுந்த பொழுதுதான் இந்தியாவின் தேசபக்தர்களின் லட்சணத்தை திருவாளர் பொது ஜனத்திற்கு புரிந்திருக்கும் யார் உண்டவீட்டிற்கு இரண்டகம் செய்பவர் என்று.

ஏன் கடந்த 2006 ஆம் ஆண்டிலேயே பிரதமர் அலுவலகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டிலிருக்கும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அலுவலகத்திலேயே சி.ஐ.ஏவின் உளவாளி இருக்கிறார் என்ற தகவல் வெளியானது.

மன்மோகன் சிங்குக்கு யாரை நம்புவது என்ற குழப்பம் மேலோங்கும் பொழுது நடுநிலையாளர்களுக்கு மன்மோகன் சிங் மீதே சந்தேகம் வலுக்கிறது. அவ்வளவு தூரம் அமெரிக்காவிற்கு அடிமை சேவகம் புரிவதில் கண்ணும் கருத்துமாக உள்ளார் அவர்.

மும்பைத் தாக்குதலில் கஸாபிற்கு தூக்குத்தண்டனை தீர்ப்பை பெற்றுத் தந்ததை சாதனையாக பெருமைக்கொள்ளும் ஆட்சியாளர்கள் மும்பை தாக்குதலின் சூத்திரதாரியான அமெரிக்க உளவாளி ஹெட்லியிடம் ஒரு கேள்வியைக்கூட கேட்க முடியவில்லையே.

அடிநாக்கில் விஷமும் நுனி நாக்கில் தேனும் வைத்து பேசும் ஒபாமாவின் பேச்சில் மயங்கிவிட்டார்கள். இன்னும் முடியவில்லை இவர்களின் ஓர் ஆண்டு சாதனை! எந்தப் பொருளின் விலை குறைந்தாலும் சரி அரிசி, பருப்பு, சீனி, தேயிலை போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் குறைக்கவேக் கூடாது என்பதில் பிடிவாதமாக உள்ளார்கள். இதற்கென தனி அமைச்சகத்தை எவருக்கும் தெரியாமல் உருவாக்கினார்களோ என்னவோ!இப்பொழுதுதான் எல்லாவற்றையும் செய்து முடித்த பின்னர்தானே மக்களுக்கு தெரியவருகிறது.

உள்நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்துக்கொண்டிருக்கும் வேளையில்தான் பி.டி.கத்தரிக்காயை வெளிநாட்டிலிருந்து இறக்குமதிச் செய்ய திட்டம் தீட்டினார்கள்.

ரோம் நகர் தீப்பற்றி எரிந்துக் கொண்டிருக்கும் வேளையில் நீரோ மன்னன் பிடி வாசித்துக் கொண்டிருந்த சம்பவம்தான் இடஒதுக்கீடு விவகாரத்தில் ஐ.மு அரசு நடந்துக் கொண்டதில் நினைவுக்கு வருகிறது. அவர்களாலேயே நியமிக்கப்பட்ட கமிஷன்கள் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்கியே ஆகவேண்டும் என்று பரிந்துரைக்கூற கமிஷன்கள் நியமிக்கப்படாமலேயே கொண்டுவரப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதில் காட்டும் அக்கறை அபாரம்தான் போங்க!

கூடவே பரிவாரங்களும், காமரேட்டுகளும். கேட்கவேண்டுமா கோலாகலத்திற்கு.அதிலும் கடைந்தெடுத்த கயமைத்தனத்தை வெளிப்படுத்தினார்கள். சிறுபான்மை மக்களுக்கு உள்ஒதுக்கீட்டைக்கீட்டை பல்வேறு தரப்பினரும் கோரியபொழுது சாதகமான எந்த பதிலும் இல்லை இவர்களிடம்.

மகளிருக்கு இடஒதுக்கீட்டை வழங்கி மேல்தட்டு பெண்களால் மக்களவையையும், மாநிலங்களவையையும் ஜொலிக்க வைப்பதில் இவர்களுக்கு எவ்வளவு ஆர்வம்? இப்பொழுது கூறுங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடந்த ஓர் ஆண்டு அவ்வளவு மோசமானதா?

விமர்சகன்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதலாண்டு நிறைவுறும் வேளையில்..."

கருத்துரையிடுக