ஈராக்கில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று இரு மாதங்கள் கடந்த நிலையிலும் இதுவரை புதிய அரசு அமைக்கப்படவில்லை. இது குறித்து சர்வதேச நாடுகளின் கவனம் ஈராக்கை நோக்கித் திரும்பியுள்ளது.
நடைபெற்று முடிந்த தேர்தலின் இறுதி முடிவுகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பல்வேறு குழுநிலைவாத கட்சிகளின் இழு பறியால் புதியதோர் கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதில் சவால்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் அரசியல் ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின்படி, முன்னாள் பிரதமர் இயாத் அலாவியின் மதச்சார்பற்ற கூட்டணி 91 இடங்களையும் தற்போதுள்ள பிரதமரின் தலைமையிலான கட்சி 89 இடங்களையும் பெற்றுள்ளது.
முன்னணியிலுள்ள இருவரும் ஷீஆ தலைவர்களாக உள்ளபோதும் இயாத் அலாவியின் கூட்டணியில் இணைந்த கட்சிகளில் 85%க்கும் அதிகமானவை சுன்னி முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது.
மார்ச் 7ல் நடைபெற்ற இத்தேர்தலில் சுன்னி முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை திட்டமிட்டுக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் நூரி மாலிகியின் அரசாங்கம் ஈடுபட்டிருந்தது. முன்னாள் பாத் கட்சி ஆதரவாளர்களை தேர்தலில் ஈடுபட முடியாதவாறு தடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. உண்மையில் அது பாத் கட்சி என்ற பெயரில் சுன்னி சமூக வேட்பாளர்களைத் தடுப்பதாகவே இருந்தது.
ஈராக் தேர்தல் அதிகாரக்குழு தேர்தலில் போட்டியிட்ட 52 வேட்பாளர்களின் மனுவை செல்லுபடியற்றது என்று அறிவித்துள்ளது. மார்ச் 7ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இவர்கள் போட்டியிட்டனர். எனினும் தேர்தலுக்குப் பின்னரே வேட்புமனு செல்லுபடியற்றது என அறிவிக்கப்பட்டது.அவர்களில் இரண்டு பேர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் என்பதும் அவர்களின் ஒருவர் இயாத் அலாவியின் கூட்டமைப்பைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னாள் துணைப் பிரதமர் அஹ்மத் ஷலாபியின் தலைமையிலான நீதிக்கும் பொறுப்பாண்மைக்குமான குழுவின் பேச்சாளர் அலி மஹ்மூத் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், இவர்கள் தேர்தலில் பங்குபெற்றது சட்ட விரோதம் எனக்கூறியுள்ளார். இக்குழுவில் மூன்று சட்டத் வல்லுனர்களும் இடம்பெறுகின்றனர்.
ஈராக்கின் தேசிய தேர்தல் ஆணையத்தால் நிறுவப்பட்ட இக்குழு அந்நாட்டில் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இவர்கள் சுன்னி முஸ்லிம்கள் சார்பாக தேர்தலில் களமிறங்கியவர்களை ஓரங்கட்டவே இக்குழுவை நியமித்துள்ளனர். தற்போது ரத்துச் செய்யப்பட்ட 52 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
அறிவிக்கப்பட்ட முடிவுகளின் படி நூரி மாலிக்கியோ இயாத் அலாவியோ தனித்து நின்று புதிய அரசாங்கத்தை அமைக்க முடியாது.
325 இடங்களைக் கொண்ட ஈராக்கிய பாராளுமன்றத்தில் ஆட்சியமைக்கும் எந்தக் கூட்டணியும் குறைந்தபட்சம் 163 இடங்களைப் பெற்றிருக்க வேண்டும். இதனால், ஏனைய கட்சிகளை தம்மோடு இணைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
சதாம் ஹுஸைன் ஆட்சி கவிழ்க்கப்பட்டதற்குப் பின்னர் அதிகாரத்தில் அமர்த்தப்பட்ட நூரி மாலிகியை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ள வாஷிங்டன் முயற்சிக்கின்றது.
பாக்தாதுக்கான வாஷிங்டன் தூதர் கிறிஸ்தோபர் ஹில், புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து அமெரிக்கா கவலை கொள்வதாகத் தெரிவிக்கிறார்.
செய்தி:மீள்பார்வை
0 கருத்துகள்: on "ஈராக்:புதிய அரசாங்கத்தை அமைப்பதில் பெரும் இழுபறி"
கருத்துரையிடுக