25 மே, 2010

உலகக் கோப்பை கால்பந்தாட்டம்:இன உறவுகளை வலுப்படுத்துமா?

தென்ஆப்பிரிக்காவில் நடக்கவுள்ள உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் அந்நாட்டின் கருப்பு மற்றும் வெள்ளையின மக்கள் இடையில் உறவுகள் மேம்பட எந்த அளவுக்கு உதவும் என்பது குறித்து பல்வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. தென்ஆப்பிரிக்காவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் வரும் ஜூன் மாதம் 11 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அங்கு போட்டிகளுக்கான இறுதிகட்ட ஆயத்தப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

புதிய கட்டிடங்கள், விளையாட்டு அரங்கங்கள், வணிக அங்காடிகள், சாலை வசதிகள், கால்பந்து பயிற்சி மையங்கள் என பல விடயங்களில் இப்போட்டிகள் தென் ஆப்பிரிக்காவின் முன்னேற்றத்துக்கு உதவும் என்று அந்நாட்டின் அரசும், சர்வதேச கால்பந்தாட்டக்கழகமும் சொல்லி வருகின்றன.

இந்த உலகக் கோப்பை போட்டிகளுக்காக விளையாட்டு அரங்கங்களை உருவாக்குவதற்கு மட்டும் 8பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளன.

ஆனாலும் தென் ஆப்பிரிக்காவில் உலகக் கோப்பை போட்டிகள் அங்குள்ள கருப்பு மற்றும் வெள்ளையின மக்களை மேலும் ஒன்றுசேர்ப்பதில் எந்த அளவுக்கு உதவும் என்பது குறித்து மாற்றுக் கருத்துக்கள் நிலவவே செய்கின்றன.

அங்கு கால்பந்தாட்டமும்,ரக்பி விளையாட்டும் மக்களை இன ரீதியாக பிரித்துள்ளது என்றும் கூட கூறப்படுகிறது.

அங்கு கருப்பின மக்கள் பெரும்பாலும் கால்பந்து விளையாட்டையும், வெள்ளையின மக்கள் ரக்பி மற்றும் கிரிக்கெட் விளையாட்டையும் பிரதானமாக விளையாடி வருகின்றனர்.

தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பை போட்டிகள் சின்னம் அந்நாட்டில் இருக்கும் கருப்பின மக்களுக்கு கால்பந்து விளையாட்டின் மீது இருக்கும் அதீதமான காதலையும் ஈடுபாட்டையும் வெளிப்படுத்த ஒரு முக்கியமான வாய்ப்பாக இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் அமைந்துள்ளன.

1995 ஆம் ஆண்டு ரக்பி விளையாட்டின் உலகக் கோப்பை போட்டிகளின் போது, பெரும்பாலும் வெள்ளையின மக்களைக் கொண்ட ரக்பி அணியான ஸ்பிரிங் பாக்ஸ் அணியின் பின்னர் நாட்டுமக்கள் அனைவரும் இன பேதங்களை மறந்து அணி திரள வேண்டும் என்று அப்போது நெல்சன் மண்டேலா அழைப்பு விடுத்திருந்ததை இப்போதும் பலர் நினைவு கூறுகிறார்கள்.

'நெல்சன் மண்டேலா விடுத்த அழைப்பின் எதிரொலியாக கருப்பின மக்கள் ஏகோபித்த ஆதரவை வெளிப்படுத்தினர். ரக்பி விளையாட்டு என்றால் என்ன, அது என்ன விதிகளுக்கு உட்பட்டு ஆடப்படுகிறது என்று எள்ளளவும் தெரியாத மக்கள் கூட நாட்டின் ரக்பி அணியை ஆதரித்தனர். அப்படியான ஒரு ஆதரவை இங்குள்ள வெள்ளையின மக்கள் இப்போது வெளிப்படுத்துவார்கள் என கருப்பின மக்கள் எதிபார்ப்பார்கள்' என்று தென் ஆப்பிரிக்க கால்பந்து விளையாட்டு குறித்த ஆய்வாளர் ஜோ லக்கட் கோமோ கூறுகிறார்.

'உலகக் கோப்பை போட்டிகளின் விளைவாக கருப்பின மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு உடனடியாக சுமார் 65 பில்லியன் டாலர்கள் அளவுக்கு நிதி ஒதுக்க திடீரென அரசாங்கத்துக்கு விருப்பம் ஏற்பட்டுள்ளது' என்று தென் ஆப்பிரிக்க தொழிற்சங்க கழகத்தின் பொதுச் செயலர் ஸ்வெலிஜிமா வாவி கூறுகிறார்.
source:BBC

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "உலகக் கோப்பை கால்பந்தாட்டம்:இன உறவுகளை வலுப்படுத்துமா?"

கருத்துரையிடுக