டெல்லி:இரு கொலை வழக்குகளில் தூக்கு தண்டனை பெற்ற 8 கொலையாளிகளின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் ஷியாம் மனோகர். இவரது சகோதரர் கொலை செய்யப்பட்டதால் அவரும், ஷியோராம், பிரகாஷ், ரவீந்தர், சுரேஷ், ஹரீஸ் ஆகிய 6 பேர் சேர்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவன் உள்ளிட்ட 5 பேரை பழிக்குப் பழியாக கொலை செய்தனர்.
இதில் இந்த 6 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. 1997ம் ஆண்டு இந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
அதேபோல இதே மாநிலத்தை சேர்ந்த தர்மேந்திர குமார், நரேந்திர யாதவ் ஆகியோர், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரைக் கொலை செய்தனர்.
இதையடுத்து இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1999ம் ஆண்டு இந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
தூக்கு தண்டனை பெற்ற இவர்கள் ஜனாதிபதி பிரதீபா பட்டீலுக்கு கருணை மனு அனுப்பினர். அதில் தங்களது மரண தண்டனையை குறைக்குமாறு கோரியிருந்தனர்.
இந்த மனுக்களை பரிசீலித்த பிரதீபா பட்டீல் 8 பேரின் கருணை மனுக்களை ஏற்று, தூக்கு தண்டனையை ரத்து செய்தார். அதை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டுள்ளார்.
தகவல் அறியும் சட்டத்தின்கீழ் இந்த விவரங்களை உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 30 ஆண்டுகளாக ஜனாதிபதியின் பரிசீலனைக்காக 77 கருணை மனுக்கள் வந்துள்ளன. இதில் 10 மனுக்களை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் பரிசீலித்து ஆயுள் தண்டனையாகக் குறைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் அடக்கம். 2009ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி தமிழ்நாட்டை சேர்ந்த கோவிந்தசாமி என்பவருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ஜனாதிபதி ஆயுள் தண்டனையாகக் குறைத்தார் என்பது நினைவுகூறத் தக்கது.
0 கருத்துகள்: on "தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரின் கருணை மனு - ஜனாதிபதி ஏற்பு - தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு"
கருத்துரையிடுக