கோவையில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஞாயிற்றுக்கிழமை (இன்று) நிறைவுபெறுகிறது.
இன்றைய நிகழ்ச்சியில் மத்திய நிதிஅமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு புதன்கிழமை காலை கோலாகலமாகத் துவங்கியது. மாநாட்டை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் துவக்கிவைத்தார். மாநாட்டுக்கு முதல்வர் மு.கருணாநிதி தலைமை வகித்தார். முதல்நாளன்று மாலை நடைபெற்ற பிரமாண்டப் பேரணியில் லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
2-வது நாளில் ஆய்வரங்கம் துவக்கிவைக்கப்பட்டது. இதில் வெளிநாட்டு தமிழறிஞர்கள் உள்பட 1,000-க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.
3-ம் நாள் நடைபெற்ற "எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்னும் கருத்தரங்கில் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
நிறைவு நாள் நிகழ்ச்சிகள்:ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு 'வித்தாக விளங்கும் மொழி' என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. பேராசிரியர் சுப.வீரபாண்டியன் துவக்கிவைக்கிறார்.
மாலை 4 மணிக்கு நிறைவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா செம்மொழி மாநாட்டு சிறப்பு அஞ்சல் தலையை வெளியிடுகிறார். மத்திய நிதிஅமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை வகிக்கிறார். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலை வகிக்கிறார். சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்கியவர்களுக்கு கணியன் பூங்குன்றனார் விருதை வழங்கி, முதல்வர் கருணாநிதி நிறைவுரை ஆற்றுகிறார்.
0 கருத்துகள்: on "செம்மொழி மாநாடு இன்று நிறைவு"
கருத்துரையிடுக