கோவை:உடல் நலக்குறைவால் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம் (67) நேற்று சனிக்கிழமை இரவு காலமானார்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்பதற்காக கோவை வந்த சுதர்சனத்துக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு ஏற்கனவே அறுவைச் சிகிச்சை செய்த இடத்திலிருந்து வலி ஏற்பட்டு, சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியேறியது. அதையடுத்து கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் (கேஎம்சிஎச்) சேர்க்கப்பட்டார்.
மூச்சுத் திணறல் இருந்ததால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் இருந்தே இதயத் துடிப்பு குறைவாக இருந்தது. முதல்கட்ட சிகிச்சையில் ரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும் மூச்சுத் திணறல்,இதயத் துடிப்பு குறைவாக இருந்த காரணத்தால், தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று சனிக்கிழமை இரவு 8.50 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மருத்துவமனைக்கு வந்த முதல்வர் கருணாநிதி, சுதர்சனம் உடலுக்கு மரியாதை செலுத்தினார்.
மறைந்த காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் சென்னையை அடுத்த பூந்தமல்லி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
0 கருத்துகள்: on "தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் மறைவு"
கருத்துரையிடுக