டெல்லி:யூனியன் கார்பைடு முன்னாள் தலைவர் வாரன் ஆன்டர்சனை விடுவிப்பதைத் தவிர நமக்கு அப்போது வேறு வழி இருக்கவில்லை என்று ஆன்டர்சனை கோட்டை விட்ட விவகாரத்தில் சப்பைக்கட்டு கட்டியுள்ளார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.
வாரன் ஆன்டர்சனை விடுதலை செய்யுமாறு 1984ம் ஆண்டு மத்தியப் பிரதேச முதல்வராக இருந்த அர்ஜூன் சிங் உத்தரவிட்டார். போபால் விஷ வாயு வழக்கில் போபால் கோர்ட் பிறப்பித்துள்ள தீர்ப்பால் மக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ள நிலையில் அர்ஜூன் சிங்கின் இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜூன் சிங் அரசால் அன்று விடுவிக்கப்பட்ட ஆன்டர்சன் அதன் பிறகு அமெரிக்காவுக்கு ஓடி தப்பி விட்டார். விஷ வாயு வழக்கில் அவர் அதன் பிறகு ஆஜராகவே இல்லை.
மேலும்,அப்போதைய ராஜீவ் காந்தி அரசு உத்தரவிட்டதால்தான் ஆன்டர்சனை அர்ஜூன் சிங் விடுவித்தார் என்றும் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. எனவே ஆன்டர்சன் தப்பிப் போக ராஜீவ் காந்திதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து பிரணாப் முகர்ஜி அளித்துள்ள பேட்டியில், அந்த சமயத்தில் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சமாளிக்க வேண்டிய அர்ஜூன் சிங்குக்கு இருந்தது. மக்கள் பெரும் கொந்தளிப்புடன் இருந்தனர். எனவே அமைதியை நிலை நாட்டுவதற்காக ஆன்டர்சனை விடுவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக அர்ஜூன் சிங் தெரிவித்துள்ளார். அது சரியானதே என்று கூறியுள்ளார்.
ஆனால், ராஜீவ்காந்தி அரசு உத்தரவிட்டதால்தான் ஆன்டர்சனை அர்ஜூன் சிங் அரசு விடுவித்ததாக கூறப்படுவதை மட்டும் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.
source:Thatstamil
0 கருத்துகள்: on "ஆன்டர்சனை விடுவிப்பதை தவிர நமக்கு வேறு வழியில்லை - பிரணாப் முகர்ஜி"
கருத்துரையிடுக