திருவனந்தபுரம்:பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள அப்துல் நாசர் மதானியை கைது செய்ய கர்நாடக போலீசாருக்கு கேரள அரசு அனைத்து உதவிகளும் செய்யும் என அறிவித்துள்ளது.
ஜூன் 12-ம் தேதி அன்று பெங்களூர் போலீசார் பெங்களுர் குண்டு வெடிப்பு வழக்கின் இடைக்கால குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். அதில் 31வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் மதானி. இதனால் எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து கொல்லத்தில் மதானியின் வீடு இருக்கும் அன்வர்சேரியில் அவரது கட்சித் தொண்டர்கள் குவிந்துள்ளனர். இந்நிலையில் மதானி இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்ய இருப்பதாக தெரிகிறது.
இந்த விவகாரம் குறித்து கேரள உள்துறை அமைச்சர் கோடியேறி பாலகிருஷ்ணன் கூறுகையில், மதானி பெங்களூர் குண்டுவெடிப்பபு வழக்கில் குற்றவாளியாக சேர்த்தது பற்றி பெங்களூர் போலீசார் கேரள அரசுக்கு இன்னும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை.அவரை கைது செய்ய பெங்களூர் போலீசார் கேரள அரசை நாடினால் அனைத்து உதவிகளையும் அது செய்யும் என்றார்.
ஏற்கனவே கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி பல வருடம் சிறையில் இருந்தார் மதானி.பின்னர் இந்த வழக்கிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: on "மதானியை கைது செய்ய கர்நாடக போலீசுக்கு உதவ தயார்- கேரள அரசு"
கருத்துரையிடுக