10 ஜூன், 2010

ஆஃப்கன்:தலிபானுடன் தொடர்பு என சந்தேக அடிப்படையில் சிறைபட்டவர்களின் வழக்குகளை மறுபரீசீலனை செய்ய ஹமீத் கர்சாய் உத்தரவு

காபூல்:ஆஃப்கன் சிறைகளில் தலிபான் என சந்தேகத்தின் பேரில் அடைப்பட்டுக் கிடக்கும் கைதிகளின் வழக்குகளை மறுபரீசீலனை செய்யுமாறு ஆஃப்கான் அதிபர் ஹமீத் கர்சாய் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர்களுக்கெதிரான சாட்சியங்கள் வலுவாக இல்லாத பட்சத்தில் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமெனவும் கர்சாய் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, உள்துறை அமைச்சர் ஹனீப் அட்மரும் புலனாய்வுத்துறை தலைமையதிகாரி அம்ருல்லாஹ் சலேஹ்யும் இராஜினாமா செய்திருப்பதாகக் கர்சாயின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் தலைநகர் காபூலில் நடைபெற்ற அமைதி மாநாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் விவகாரம் தொடர்பாக இவர்கள் பதவி விலகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தாக்குதல் தொடர்பாக இவர்கள் ஜனாதிபதிக்கு சமர்ப்பித்த அறிக்கை திருப்திகரமானதாக இல்லையென்றும் இதனால் இவர்களின் இராஜினாமாவை கர்சாய் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான் சந்தேக நபர்களின் வழக்குகளை மறுபரீசீலனை செய்வதற்கான கர்சாயின் அறிவிப்பு ஜிர்கா அமைதி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கான ஆரம்ப செயலாக கருதப்படுகிறது.

இம்மாநாட்டில் தலிபான்களுடன் பேச்சுகளை ஆரம்பித்தல், சிறைகளிலுள்ள தலிபான் சந்தேக நபர்களின் விசாரணைகளைத் விரைவுபடுத்தி அவர்களை விடுதலை செய்தல் உள்ளிட்ட தலிபான்களுடனான நல்லிணக்கத் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை,தலிபான்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நூற்றுக்கணக்கானவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், எவ்வளவு பேரின் வழக்குகள் மறுபரீசீலனை செய்யப்பட போகின்றன என்பது தெளிவாகவில்லை.

மேலும், ஒவ்வொரு வழக்கு விசாரணையையும் மேற்பார்வை செய்யும் குழுவொன்றும் அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரங்கள் வலுவற்று இருக்கும் அல்லது அச்சுறுத்தல் இல்லாத சந்தேகநபர்களை விடுதலை செய்யுமாறு கர்சாய் தன்னிடம் கேட்டுக்கொண்டிருப்பதாக ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க இராணுவத் தளபதி மைக் கிறிஸ்டல் தெரிவித்துள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆஃப்கன்:தலிபானுடன் தொடர்பு என சந்தேக அடிப்படையில் சிறைபட்டவர்களின் வழக்குகளை மறுபரீசீலனை செய்ய ஹமீத் கர்சாய் உத்தரவு"

கருத்துரையிடுக