25 ஜூன், 2010

பாஜக-வில் மீண்டும் இணைந்த ஜஸ்வந்த் சிங்

பாரதிய ஜனதா கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங், மீண்டும் பாஜகவில் சேர்ந்தார். ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

முன்னாள் மத்திய அமைச்சரான ஜஸ்வந்த் சிங் எழுதிய ஜின்னா- இந்திய பிரிவினையும் சுதந்திரமும் என்ற புத்தகத்தில், பாகிஸ்தான் நிறுவனர் முகமது அலி ஜின்னாவை புகழ்ந்துரைத்திருந்தார். பிரிவினை வாதத்துக்கு ஆதரவாக ஜவாஹர்லால் நேருவும் சர்தார் படேலும் காரணமாக இருந்தனர் என்றும், முகமது அலி ஜின்னா மட்டும்தான் மதச்சார்பற்ற தலைவராக இருந்தார் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனை சங்பரிவார் அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன. ஜஸ்வந்த் சிங்கின் புத்தகத்தை குஜராத்தில் விற்பனை செய்ய நரேந்திர மோடி தடை விதித்தார்.

இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் அவர் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார்.

டார்ஜீலிங்கில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங், நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு தலைவராக இருந்தார். இப்பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் அதை அவர் அப்போது ஏற்கவில்லை.பின்னர் கடந்த ஆண்டு டிசம்பரில் அப்பதவியை ஜஸ்வந்த் சிங் ராஜிநாமா செய்தார்.

பாஜக-வின் தலைவராக நிதின் கட்காரி பொறுப்பேற்ற பிறகு, கட்சியிலிருந்து வெளியேறிய தலைவர்கள் மீண்டும் கட்சியில் சேர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

சமீபத்தில் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவை அழைத்து பேசி அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பை அளித்தார். இதையடுத்து தற்போது ஜஸ்வந்த் சிங்கையும் கட்சியில் சேர்த்துக் கொண்டுள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாஜக-வில் மீண்டும் இணைந்த ஜஸ்வந்த் சிங்"

கருத்துரையிடுக