டெல்லி: போபால் விஷ வாயு சம்பவத்திற்குப் பின்னர் இந்தியா வந்திருந்த வாரன் ஆன்டர்சன் கைது செய்யப்பட்ட பின்னர், மத்திய அரசின் தலையீட்டின் பேரில் விடுவிக்கப்பட்டார். அவருக்கு எந்தவித ஆபத்தும் இல்லாமல், நாட்டை விட்டு பத்திரமாக வெளியேற அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர் அன்றைய உள்துறை அமைச்சர் பி.வி.நரசிம்ம ராவ்தான் என்று கூறியுள்ளார் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் எம்.கே.ரஸ்கோத்ரா.
ராவ் செய்த ஏற்பாடுகளுக்குப் பிறகுதான் ஆன்டர்சன் பத்திரமாக நாட்டை விட்டு வெளியேறினார் என்றும் ரஸ்கோத்ரா கூறியுள்ளார்.
இதுகுறித்து ரஸ்கோத்ரா அளித்துள்ள ஒரு பேட்டியில், ஆன்டர்சனை பத்திரமாக வெளியேற்றுவதற்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்தியவர் நரசிம்ம ராவ்தான். இதை அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியிடமும் தெரிவித்தார். ராஜீவ் காந்தியும் அதை ஆட்சேபிக்கவில்லை. ராவ் செய்தவை சரிதான். நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு அந்த முடிவு எடுக்கப்பட்டது.
தான் பத்திரமாக வெளியேற ஏற்பாடு செய்யுமாறு அப்போதைய அமெரிக்க துணைத் தூதர் கார்டன் ஸ்டிரீப் மூலமாக இந்திய அரசிடம் வேண்டுகோள் வைத்தார் ஆன்டர்சன். அதன் பிறகே ஆன்டர்சன் வெளியேறுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன.
இந்த விவகாரத்தை கவனிக்கும் முழுப் பொறுப்பும் ராவிடம் விடப்பட்டது. ஆன்டர்சனை முதலில் போலீஸார் கைது செய்திருந்தனர். ஆனால் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். ஆன்டர்சனை கைது செய்தது தவறு என்று ராவ் நினைத்திருக்கலாம். அதனால் அவரை விடுவிக்க கூறியிருக்கலாம். எப்படி இருந்தாலும், நாட்டின் நலன் கருதியே ஆன்டர்சன் விடுவிக்கப்பட்டார்.
முன்னதாக, அன்றைய அமெரிக்க துணைத் தூதர் ஸ்டிரீப் என்னைத் தொடர்பு கொண்டு போபால் விஷ வாயு சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்துள்ள ஆன்டர்சன் இந்தியா வருவதாகவும், சம்பவ இடத்தை நேரில் பார்க்க விரும்புவதாகவும் என்னிடம் தெரிவித்தார்.
அதற்கு நான், அவர் பத்திரமாக வந்து செல்வதை என்னால் உறுதி செய்ய முடியாது. சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி விட்டுச்சொல்கிறேன் என்று கூறினேன். பின்னர் உள்துறையுடன் பேசினேன். அமைச்சரவைச் செயலாளரிடமும் பேசினேன். அவர்களின் உத்தரவுக்காக காத்திருந்தேன். அன்றைய தினமே உத்தரவுகளும் வந்தன.
தான் தலைவராக உள்ள நிறுவனத்தில் ஒரு மோசமான சம்பவம் நடந்துள்ளது. அதைக் கேள்விப்பட்டு வர விரும்புகிறார் ஆன்டர்சன். அது நியாயமானதுதான் என்பதை அரசும் உணர்ந்திருந்தது.
ஆனால் ஆன்டர்சன் இங்கு வந்த பின்னர் அவர் கைது செய்யப்பட்டது சரியில்லை என்பது எனது எண்ணம். நமது பாதுகாப்பை கோரி அதன் பின்னர் வந்த ஒருவரைக் கைது செய்தது மோசமான செயல் என்பது அப்போது எழுந்த பரவலான கருத்து. இதனால்தான் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
ஆன்டர்சனை கைது செய்ய உத்தரவிட்டது அப்போதைய ம.பி. முதல்வர் அர்ஜூன்சிங்கா, நிர்வாக அதிகாரிகளா, காவல்துறை அதிகாரிகளா என்பது எனக்குத் தெரியவில்லை என்றார் ரஸ்கோத்ரா.
இதுவரை நரசிம்மராவுக்கும் இந்த சம்பவத்திற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்த தெளிவான தகவல்கள் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது ராவ்தான் இந்த விவகாரத்தை முழுமையாக கவனித்தார், அவர்தான் இந்தியா வந்து கைதுசெய்யப்பட்ட ஆன்டர்சன் பத்திரமாக நாடு திரும்ப உதவினார் என்பது தெளிவாகத் தெரிய வந்துள்ளது.
0 கருத்துகள்: on "ஆன்டர்சன் பத்திரமாக வெளியேற உதவினார் நரசிம்ம ராவ்-மாஜி வெளியுறவு செயலாளர்"
கருத்துரையிடுக