31 ஜூலை, 2010

சொராஹ்ப்தீனைக் கொல்ல இராஜஸ்தானின் முன்னாள் பாஜக அமைச்சருக்கு ரூ.10 கோடி கொடுத்த மார்பிள் முதலைகள்

டெல்லி,ஜுலை31:சொராஹ்ப்தீன் ஷேக்கை படுகொலை செய்ய ராஜஸ்தான் முன்னாள் பாஜக அமைச்சர் குலாப் சந்த் கட்டாரியாவுக்கு மார்பிள் தொழிலை நடத்தி வரும் முதலாளிகள் ரூ.10 கோடி பணத்தைக் கொடுத்ததாக சொராஹ்ப்தீன் வழக்கில் சிபிஐ தரப்பு சாட்சியான அஸம் கான் என்பவர் தெரிவித்துள்ளார்.

சொராஹ்ப்தீன் வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்து பின்னர் கொல்லப்பட்ட பிரஜாபதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அவரது அறையில் இருந்தவர்தான் இந்த அஸம்கான்.

சொராஹ்ப்தீன் கொலை குறித்து அஸம்கான் கூறுகையில்,பாஜக தலைவரும்,ராஜஸ்தான் மாநில முன்னாள் உள்துறை அமைச்சருமான குலாப்சந்த் கட்டாரியாவுக்கு, ஆர்.கே.மார்பிள்ஸ் நிறுவனம் ரூ.10 கோடி பணத்தைக் கொடுத்து சோராபுதீனை தீர்த்துக் கட்டி கோரியது. இந்தப் பணத்தை மார்பிள் நிறுவன முதலாளிகள் சேர்ந்து கொடுத்தனர்.

இந்தத் தகவலை பிரஜாபதி என்னிடம் தெரிவித்தார். பல கோடி பணத்தை ஆர்.கே மார்பிள்ஸ் நிறுவனம் சக முதலாளிகளிடம் வசூலித்தது. அதில் ஒரு பகுதியை அவர்களே பங்கு போட்டுக் கொண்டனர். மிச்சப் பணத்தைத்தான் கட்டாரியாவிடம் கொடுத்தனர். அவருக்கு மட்டும் ரூ.10 கோடி தரப்பட்டுள்ளதாக பிரஜாபதி தெரிவித்தார்.

சொராஹ்ப்தீன் கொலை வழக்கில் முக்கிய சாட்சி என்பதால் குஜராத் மற்றும் ராஜஸ்தான் போலீஸார் சேர்ந்து பிரஜாபதியைக் கொலை செய்து விட்டனர்.

"நான் தற்போது இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருப்பதால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. என்னைத் தீர்த்துக் கட்ட அவர்கள் முயலலாம் என அஞ்சுகிறேன். மிரட்டல் தொலைபேசிகளும் வருகின்றன" என்றார் அவர்.

ஆனால் இந்தப் புகாரை கட்டாரியா மறுத்துள்ளார். "நான் அமைச்சராக இருந்த ஐந்து ஆண்டு காலமும் என்னை சிபிஐ இதுதொடர்பாக அணுகவே இல்லை. நான் இதில் தொடர்பு கொள்ளவில்லை என்பதை 100 சதவீதம் நம்புகிறேன்" என்றார் கட்டாரியா.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சொராஹ்ப்தீனைக் கொல்ல இராஜஸ்தானின் முன்னாள் பாஜக அமைச்சருக்கு ரூ.10 கோடி கொடுத்த மார்பிள் முதலைகள்"

கருத்துரையிடுக