28 ஜூலை, 2010

வங்கி மோசடி:கேதன் பரேக்கிடம் ரூ.2.5 கோடி லஞ்சம் வாங்கிய அமித் ஷா!

டெல்லி,ஜுலை28:1,600 கோடி கூட்டுறவு வங்கி மோசடியில் கைது செய்யப்பட்ட பங்கு சந்தை புரோக்கர் கேதன் பரேக்கிடம், குஜராத் முன்னாள் அமைச்சர் அமித் ஷா ரூ.2.5 கோடி லஞ்சம் வாங்கிக் கொண்டு அவரை காப்பாற்ற முயன்ற விவரம் இப்போது வெளியில் வந்துள்ளது.

2005ம் ஆண்டில் குஜராத்தின் மகாதேவ்புரா மெர்கன்டைல் கூட்டுறவு வங்கியில் ரூ.1,600 கோடியை சுருட்டி அந்த வங்கியையே திவால் ஆக்கியவர் கேதன் பரேக்.

எந்தவிதமான சொத்துப் பத்திரங்களையும் தராமல் இந்த வங்கியிலிருந்து ரூ. 1,600 கோடி கடன் வாங்கினார் பரேக். ஆனால், அந்தப் பணத்தைத் திருப்பிச் செலுத்தாதால் வங்கியே திவால் ஆனது.(இந்த வங்கியின் இயக்குனராக இருந்தவர் அமித் ஷா என்பது குறிப்பிடத்தக்கது.)

இதையடுத்து பரேக் கைது செய்யப்பட்டார். ஆனால், அவரை வழக்கிலிருந்து காப்பாற்ற அமித் ஷா முயன்றதாக அப்போதைய குஜராத் சிபிஐ போலீஸ் பிரிவின் ஏடிஜிபி குல்தீ்ப் ஷர்மா,தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அப்போதைய தலைமைச் செயலாளர் சுதிர் மன்காடுக்கு அவர் எழுதிய கடிதத்தில், கேதன் பரேக்கை காப்பாற்ற அமைச்சர் ஷா ரூ. 2.5 கோடி லஞ்சம் வாங்கியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

கிரிஷ் தானி என்ற இடைத் தரகரின் வீட்டில் வைத்து இந்தப் பணம் அமித் ஷாவிடம் தரப்பட்டது தனது விசாரணையில் உறுதியாகியுள்ளதாகவும், இந்தப் பணத்தை வாங்கிக் கொண்டதால் அமித் ஷாவை இயக்குனராகக் கொண்ட அந்த வங்கி, கேதன் பரேக்கை ஜாமீனில் விடுவித்ததை எதிர்த்து மேல் முறையீடு செய்யாமல் விட்டுவிட்டதாகவும் அந்தக் கடிதத்தில் குல்தீப் கூறியுள்ளார்.

இதனால் ஷா மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தி்ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் குல்தீ்ப் பரிந்துரை செய்துள்ளார்.

ஆனால், அந்தக் கடிதத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தலைமைச் செயலாளரும் முதல்வர் நரேந்திர மோடியும் அந்தக் கடிதத்தையே மறைத்துவி்ட்டனர்.

மேலும் இந்த விவகாரத்தில் கடந்த 5 ஆண்டுகளாக சிஐடி போலீசாரை விசாரணை நடத்த விடாமலும் குஜராத் முதல்வர் தடுத்துவிட்டார். இதனால் இந்த வழக்கிலிருந்து அமித் ஷா மட்டுமின்றி கேதன் பரேக்கும் தப்பிவிட்டனர். இப்போது பரேக் ஜாமீனில் சுதந்திரமாக உலவி வருகிறார்.

அத்தோடு இல்லாமல் ஷா லஞ்சம் வாங்கியது குறித்து கடிதம் எழுதிய சிஐடி ஏடிஜிபி குல்தீப் ஷர்மாவை அந்தப் பதவியிலிருந்தும் தூக்கியடித்தார் முதல்வர் நரேந்திர மோடி.

ஷர்மா இப்போது குஜராத் மாநில ஆடுகள் மற்றும் கம்பளி வளர்ச்சி வாரியத்தின் தலைவராக எந்த அதிகாரமும் இல்லாத பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது தம்பி மீதும் பொய் வழக்குகள் போட்டு கடும் தொல்லை கொடுத்து வருகிறார் குஜராத் அரசு.

ஐபிஎஸ் அதிகாரியான தன்னை கம்பளி வாரியத்துக்கு தலைவராக நியமித்தது தவறு என்று கூறி மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் ஷர்மா.தன்னை மத்திய அரசுப் பணிக்கு மாற்றுமாறு அவர் வைத்த கோரிக்கையையும் குஜராத் அரசு ஏற்க மறுத்துவிட்டது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வங்கி மோசடி:கேதன் பரேக்கிடம் ரூ.2.5 கோடி லஞ்சம் வாங்கிய அமித் ஷா!"

கருத்துரையிடுக