பாகிஸ்தானில் இரு அணு உலைகளை கட்ட சீனா திட்டமிட்டுள்ளதற்கு இந்தியா தனது எதிர்ப்பை தெரிவிக்கும் எனத் தெரிகிறது.
பிரதமரின் சிறப்புத் தூதரும், தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சிவசங்கர் மேனன் சனிக்கிழமை சீனா வருகிறார். தனது மூன்று நாள் பயணத்தின்போது சீனத் தலைவர்களுடன் பேசத் திட்டமிட்டுள்ளார். அப்போது பாகிஸ்தானில் இரு அணு உலைகளைக் கட்டுவதற்கு சீனா திட்டமிட்டுள்ளது குறித்து இந்தியா தனது கவலையைத் தெரிவிப்பதுடன் எதிர்ப்பையும் தெரிவிக்கக்கூடும் எனத் தெரிகிறது. பேச்சுவார்த்தையில் இந்த விவகாரம் பிரதானமாக இடம்பெற உள்ளது.
இரு நாடுகளிடையிலான எல்லை பிரச்னை குறித்தும் அவர் பேச உள்ளார். அதேபோல் இருதரப்பு உறவு, வர்த்தக பரிமாற்றம் ஆகியவை குறித்தும் விரிவாக பேச அவர் திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையே "பாகிஸ்தானில் இரு அணு உலைகளை கட்ட சீனா திட்டமிட்டிருப்பது குறித்து இந்தியா முக்கியத்துவம் தரத் தேவையில்லை. சர்வதேச அணுசக்தி முகமையின் வழிகாட்டுதல்படியும், மேற்பார்வையிலும் கட்டப்படுவதால் இதில் கவலைப்பட வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இல்லை' என்று சீன மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் வெவ்வேறான வகையில் உறவு வைத்துள்ளதால், இரு நாடுகளுடனும் நல்லுறவை பேணவே சீனா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்: on "பாகிஸ்தானில் அணு உலைகளை அமைக்கும் சீனாவின் திட்டத்திற்க்கு இந்தியா எதிர்ப்பு"
கருத்துரையிடுக