6 ஜூலை, 2010

இந்தியா மற்றும் அமீரகம் இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம்

ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ள உள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தண்டனை பெற்று சிறை வாசம் அனுபவித்து வரும் இந்தியர்கள், விரும்பினால் இந்தியாவில் வந்து அவர்களது சிறை தண்டனையை தொடரலாம். அதே போல் இந்தியாவில் தண்டனை பெற்று சிறை வாசம் அனுபவித்து வரும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் விரும்பினால் அங்குள்ள சிறைகளில் தங்களது தண்டனையை அனுபவிக்கலாம்.

இந்த ஒப்பந்தத்தின்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் தண்டனை பெற்ற ஒருவர் இந்திய சிறைகளில் தண்டனை அனுபவித்தால் அவருக்கான செலவுகளை ஐக்கிய அரபு அமீரகமே ஏற்கும். இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு இந்தியாவில் சிறைவாசம் அனுபவிக்கும் குற்றவாளிகளின் தண்டனையை இங்குள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகம் கண்காணிக்கும்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் தண்டனை பெறும் இந்தியர்கள், இந்திய சிறைகளில் தண்டனை அனுபவிக்க விரும்பினால் சம்பந்தப்பட்ட கைதியோ அல்லது இந்திய அரசோ அந்நாட்டு அரசுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

இதே போல் இந்தியாவில் தண்டனை பெறும் ஐக்கிய அரபு அமீரக குற்றவாளிகள் அந்நாட்டில் தண்டனை அனுபவிக்க விரும்பினால் அந்நாட்டு அரசோ அல்லது சம்பந்தப்பட்ட கைதியோ வேண்டுகோள் விடுக்க வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதர் எம்.கே. லோகேஷ் கூறியுள்ளார்.

இந்த ஒப்பந்தம் தொடர்பான நடைமுறைகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.

மரண தண்டனை பெற்றவர்கள்:எனினும் பொருளாதாரம் மற்றும் நிதி முறைகேடுகளில் தண்டனை பெற்றவர்கள் மற்றும் மரண தண்டனை பெற்ற குற்றவாளிகள் ஆகியோர் இந்த ஒப்பந்தப்படி தங்கள் சொந்த நாடுகளுக்குச் சென்று தண்டனை அனுபவிக்க முடியாது. மரண தண்டனை அல்லாத வேறு தண்டனை பெற்றவர்கள் மட்டுமே தங்களது சொந்த நாட்டில் தண்டனை அனுபவிக்க முடியும்.

இந்தியாவுடன் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ள முதல் அரபு நாடு ஐக்கிய அரபு அமீரகம். ஐக்கிய அரபு அமீரகம் மற்ற அரபு நாடுகளுடன் 4 ஆண்டுகளுக்கு முன்பாகவே இத்தகைய ஒப்பந்தத்தை செய்துகொண்டுள்ளது.

இந்திய கைதிகள் விரும்பவில்லை:ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் சுமார் 2 ஆயிரம் இந்திய கைதிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.அவர்களில் பெரும்பாலோனோர் படிப்பறிவு அற்றோர். அவர்களது குடும்பத்தினர் அவர்களை சந்திக்க முடியாமல் துன்பத்துக்கு ஆளாவதால் இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுவதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.மனித உரிமை அமைப்புகளும் இந்த கோரிக்கையை விடுத்தன.

எனினும் அங்குள்ள இந்தியக் கைதிகள் சிலர் கூறுகையில் ,"ஐக்கிய அரபு அமீரக சிறைகள் நன்கு பராமரிக்கப்படுகின்றன. உணவு, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் தரமாக உள்ளன. ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் முறைகேடுகள் எதுவும் நடைபெறுவதில்லை. இந்திய சிறைகளில் இது போல் இருக்காது. எனவே நாங்கள் ஐக்கிய அரபு அமீரக சிறையிலேயே தண்டனை அனுபவிக்க விரும்புகிறோம்' என்று தெரிவித்துள்ளனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இந்தியா மற்றும் அமீரகம் இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம்"

கருத்துரையிடுக