3 ஜூலை, 2010

இந்தியாவிலேயே முதல் முறையாக கோவை, நாமக்கல்லில் பிளாட்டினம் படிவங்கள்

இந்தியாவிலேயே முதல் முறையாக பிளாட்டினம் கனிப் படிவங்கள் தமிழகத்தின் கோவை, நாமக்கல் மாவட்டங்களில் அபரிமிதமான அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசுடன் இணைந்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.


இதுதொடர்பான ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நேற்று சென்னையில் கையெழுத்தானது.


சென்னை கோட்டையில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அவரது அறையில் நடைபெற்ற இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், கொல்கத்தாவில் உள்ள இந்திய புவியியல் ஆய்வுத்துறை டைரக்டர் ஜெனரல் என்.கே.தத்தா, தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் டாக்டர் க.மணிவாசன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இதுகுறித்து சுரங்கத் துறை செயலாளர் சாந்தா ஷீலா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"தமிழகத்தில் கடந்த 2,3 ஆண்டுகளாக பிளாட்டினம் கனிமத்தை கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு கனிம நிறுவனத்துக்கு, இந்திய புவியியல் துறை இப்பணியில் உதவி வருகிறது. இதில், நாமக்கல் மாவட்டம் சத்தம்பூண்டியிலும், மேட்டுப்பாளையத்திலும் பிளாட்டினம் படிமங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுவும் மிக அதிக அளவில் இருப்பது தெரியவந்துள்ளது.

சத்தம்பூண்டி பகுதியில் 27 சதுர கி.மீ. பரப்புக்கு பிளாட்டினம் இருப்பது தெரியவந்துள்ளது. இதுபோல், மேட்டுப்பாளையம் பகுதியில் 5 சதுர கி.மீ. பகுதியில் பிளாட்டினம் உள்ளது. ஆனால், இன்னும் 150 கி.மீ. பகுதியில் பிளாட்டினம் உள்ளது.

தற்போது, 30 மீட்டர் ஆழம் மட்டுமே தோண்டியுள்ளோம். இன்னும் 200 மீட்டர் முதல் 500 மீட்டர் வரை தோண்டும்போது மிக அதிக அளவில் பிளாட்டினம் கிடைக்கக்கூடும். உலகில் தற்போது, தென்னாப்பிரிக்காவில்தான் அதிக அளவில் பிளாட்டினம் வெட்டியெடுக்கப்படுகிறது. உலகில் கிடைக்கும் 100 சதவீத பிளாட்டினத்தில் 70 சதவீதம் தென்னாப்பிரிக்காவில்தான் கிடைக்கிறது.

இந்தியாவில் ஒரிசாவில் மட்டும் ஓரளவு பிளாட்டினம் கிடைத்து வருகிறது. ஆனால், தமிழகத்தில்தான் முதல்முறையாக மிக அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.இதன் மூலம் கிடைக்கும் வருவாய் தமிழகத்தையே சேரும்.


மத்திய அரசு, பிளாட்டினம் கண்டறிவதில் உதவி மட்டுமே அளிக்கும். பிளாட்டினம் இருக்கும் இடங்களில் கனிமத்தை வெட்டியெடுப்பதில் தனியாரை ஈடுபடுத்துவது, அதை விற்பனை செய்வது என அனைத்திலுமே தமிழக அரசுதான் முழுபங்கு வகிக்கும். நிலம் கையகப்படுத்தும் பணிகள் இப்போது கிடையாது. இன்னும் அந்த அளவுக்கு பணிகள் செல்லவில்லை'" என்றார்.


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இந்தியாவிலேயே முதல் முறையாக கோவை, நாமக்கல்லில் பிளாட்டினம் படிவங்கள்"

கருத்துரையிடுக