புதுடெல்லி:ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு இன்று கூடி ஆலோசிக்கவுள்ளது.
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து மத்திய அமைச்சர்களிடையே கருத்துவேறுபாடு நிலவுகிறது. எனினும் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என்றே அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் குழுவும், ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவான பரிந்துரையை அளிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்தக் கணக்கெடுப்பை ஜாதிவாரியாக நடத்த வேண்டும் என்று சில அரசியல் கட்சிகள் குரல் கொடுத்தன.கடந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது சில அரசியல் கட்சிகள் இக்கோரிக்கையை வலியுறுத்தி அமளியிலும் ஈடுபட்டன.
லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம், முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி, சரத் யாதவ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினர்.
இதையடுத்து இந்த விவகாரத்தில் தலையிட்ட பிரதமர் மன்மோகன் சிங், உறுப்பினர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்கும் என்று உறுதியளித்தார். பின்னர் இதுகுறித்து ஆராய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்தார்.
இப்போது இந்தக் குழு, ஜாதிவாரியான கணக்கெடுப்பு குறித்து கூடி ஆலோசிக்கவுள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் விரைவாக கூடவுள்ளது. இதில் ஜாதிவாரியான கணக்கெடுப்பை மீண்டும் அரசியல் கட்சிகள் கையில் எடுத்து மத்திய அரசுக்கு கடும் நெருக்குதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடம்கொடுக்காத வகையில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு பச்சைக் கொடி காட்டிவிடும் என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 கருத்துகள்: on "ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு: அமைச்சர்கள் குழு இன்று முடிவு"
கருத்துரையிடுக