14 ஜூலை, 2010

ஒற்றைத் தலைவலி (Migraine)

உலகில் 70 சதவீதம் பெண்கள் ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். முறையான வழிகாட்டுதல்களும் சிகிச்சைகளும் இல்லாததால், அல்லது இருந்தும் எடுத்துக் கொள்ளாததால் பலர் தலைவலியை முற்றவிட்டு, பக்கவாதம் உட்பட வேறு சில ஆபத்தான நோய்களுக்கும் ஆட்படுகிறார்கள். சிலருக்குக் கண்பார்வை கூட மங்கிப் போகும் வாய்ப்பு இதனால்தான் உருவாகிறது.

அறிகுறிகள்:
மைக்ரேன் ஒரே பக்கமாக வலிக்கக் கூடிய தலைவலி என்றாலும், தலை முழுவதும் வலி தெரியும். தலையின் மேல் பகுதியிலோ, பக்கவாட்டிலோ துடிப்பது போலவும் அடித்துக் கொள்வது மாதிரியும் லேசாக வலி ஆரம்பிக்கும். படிக்கட்டில் ஏறும்போது, வீட்டு வேலைகளைச் செய்யும் போது வலி கூடும். ஒலியைக் கேட்கவோ, ஒளியைப் பார்க்கவோ கூச்சமாக இருக்கும். கூடவே குமட்டலும் வாந்தியும் வரும். வகைகள் ஒற்றைத் தலைவலி இரண்டு முக்கிய வகைகளில் அறியப்படுவதாக உள்ளது.

1. கிளாசிக் மைக்ரேன் (Classic Migraine)
தலைவலியின்போது நரம்பு தொடர்பான அறிகுறிகள் தென்படுவதை (avra) இது குறிக்கும். அதாவது தலைவலி வருவதற்கான அறிகுறிகள் இல்லாமல், நோய் வருவது போன்ற உணர்வு மட்டும் எழுவது. தலையில் நெற்றிப்பொட்டில், பொட்டெலும்பு, பின்பக்கத் தலை போன்ற இடங்களில் இதன் வலி தெரியும்.

கண்களிலும், தாடையிலும், முதுகிலும்கூட வலி தெரியலாம். பேச்சு குழறுதல், கவனமின்மை, மனநோய் போன்றவை இதனால் வர வாய்ப்புண்டு. தற்காலிகமாக பார்வையில் கோளாறு, உணர்வில் கோளாறு, கண்களுக்குள் மின்னல் போன்ற ஒளிக்கீற்று வந்து மறைதல் போன்றவை ஏற்படும். நெற்றிப் பொட்டிலும், கண்ணிலும் வலி ஏற்பட்டு, வலி அதிகரிப்பதால் சிலர் தாங்க முடியாமல் தவிப்பார்கள். சிலர் எதிலாவது தலையை முட்டிக்கொண்டு அழுவது கூட உண்டு. கை, கால்களைப் பலவீனப்படுத்தும் இந்தவலி இரண்டு நாட்களுக்கு ஒருமுறைகூட வரலாம்.

பொதுவான மைக்ரேன்: (Common migraine)
மனநிலையில் பாதிப்பு, அடிக்கடி மூடு மாறுதல், சோர்வுறுதல், மனப்பதட்டம் ஆகியவற்றால் இத்தலைவலி ஏற்படும். இது தொடர்ந்து மூன்று நான்கு நாட்களுக்கு இருந்தால் குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு, சிறுநீர் அதிகரித்தல் ஆகியன உண்டாகும். ஒற்றைத் தலைவலி எதனால் வருகிறது? மூளை இயங்குவதற்குத் தேவைப்படும் செரடோனின் என்ற வேதியியல் திரவத்தின் அளவு குறையும் போதுதான் இந்த ஒற்றைத் தலைவலிகள் ஏற்படுகின்றன. பல ஆண்டுகளாக, தலைக்குச் செல்லும் நரம்புகள் சுருங்கி இரத்த ஓட்டம் தடைப்படுவதால்தான் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் நம்பினார்கள். புதிய கண்டு பிடிப்புகளின்படி, மூளையைச் சேர்ந்த சில செல்களில் ஏற்பட்டுள்ள பரம்பரைக் குறைபாடுகள் தான் காரணம் (gentic disorder) என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படும்போது, மூளைக்குச் செல்லும் செல்கள் அழிந்துபோக வாய்ப்புகள் உண்டு. அதனால் தலைவலி ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஒற்றைத்தலைவலி பரம்பரை நோயா? ஒற்றைத் தலைவலி பரம்பரையாக வரக்கூடியது என்று சொல்லப்படுகிறது. என்றாலும், இது மரபில் உள்ள கோளாறால்தான் என்று திட்டவட்டமாகக் கூற முடியவில்லை.

கணவன்_மனைவி இருவருக்கும் ஒற்றைத் தலைவலி இருந்தால் பிள்ளைகளுக்கு 75% வாய்ப்பு உண்டு. இருவரில் ஒருவருக்கு மட்டும் இருந்தால் 50% வாய்ப்புகள் உண்டு. அவ்வளவுதான். மற்றபடி, கட்டாயம் வரும் என்று சொல்லமுடியாது.

விடுதலைபெற நம்பிக்கையான வழிகள்:
அறிகுறிகளை வைத்தே ஒற்றைத் தலைவலியை நெருங்க விடாமல் செய்ய முடியும். இதற்குப் பல வழிகள் இருந்தாலும் உங்களுக்கு உதவ சிலவழிகள்.
1. உணவுமுறையில் மாற்றம்: சரியாக உணவு உண்ணாததும், ஒத்துக்கொள்ளாத சில உணவுவகைகளை உண்பதும், அளவுக்கு அதிகமாக உண்பதும் ஒற்றைத் தலைவலிக்கு முக்கியக் காரணங்களாகும். இதனால் நல்ல ஆரோக்கியமான உணவை, வேளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். பால், காய்கறி வகைகள் நல்லது. இறைச்சி வகைகளைத் தவிர்த்தல் மிக நல்லது.

2. முறையான தூக்கம்: தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் காலையில் எழுந்ததும் தலைவலிப்பதாகச் சொல்வது வாடிக்கையாகிவிட்டது.
அதனால் நல்ல தூக்கம் வரச்செய்யும் வழி முறைகளைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக தூக்கம் வரும்வரை படிப்பது.

3.உடற்பயிற்சி:உடற்பயிற்சிதான் உடலில் உள்ள வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது. இதனால் மூளை நன்கு செயல்படத் தொடங்கும். முறையான தொடர் உடற்பயிற்சி இருந்தாலே ஒற்றைத் தலைவலி அண்டாது.

4.சுற்றுச்சூழலில் கவனம்:அதிக சூரிய வெப்பம் படுதல், வானிலை மாற்றங்கள், காற்றோட்டமில்லாத புழுக்கமாக சூழலில் வாழ்தல் ஆகிய சுற்றுச்சுழல்களாலும் சிலருக்கு தலைவலி வரும். அதனால் இவற்றைத் தவிர்த்தல் வேண்டும். காற்றோட்டமுள்ள இடத்தில் தூங்குவதும், மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வதும் மிக அவசியம்.

5.மது, புகை, காபி தவிர்த்தல் மது அருந்துதல், புகை பிடித்தல், காபி குடித்தல் சிலருக்கு தலைவலியை உண்டாக்கும். இவை முற்றிலும் நிறுத்தப்படல் வேண்டும்.சிலருக்குக் காப்பி சாப்பிட்டால் தலைவலி நிற்பது போல் தெரியும். ஆனால் அது நிரந்தரமற்றதாகும்.

6.கவலை, சோர்வு, மனஅழுத்தம் வேண்டாம். அதிகமாகக் கவலைப்படுபவர்கள், அடிக்கடி சோர்வு அடைபவர்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி ஒற்றைத் தலைவலி வரும். இவற்றில் இருந்து விடுபட, மற்றவர்களுடன் நட்பாகப் பேசிப் பழக வேண்டும். மனம் விட்டுப் பேசி குறைகளைக் களைய வேண்டும்.

7.தடுப்புமுறைகள்:ஒற்றைத் தலைவலி எதனால் வந்தது என்பதை அறிந்துகொண்டு அவற்றைத் தவிர்த்தலே மிக நல்லது.
உதாரணமாக, ஒரு நிகழ்ச்சிக்குப் போனால் தலைவலி வந்திருக்கும். திரும்பவும் அந்த நிகழ்ச்சியைக் காணாது தவிர்த்தல். சில பொருட்கள் அலர்ஜியாகி தலைவலி கொடுத்திருக்கும். அவற்றைத் தவிர்த்து முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளலாம்.

8.மருந்துகள்:அதிக அளவில் மருந்து எடுத்துக் கொள்வதும் சிலருக்குத் தலைவலி வரக் காரணமாக இருக்கும்.இதனால் மருத்துவர் ஆலோசனைப்படி மட்டுமே மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஒற்றைத் தலைவலி (Migraine)"

கருத்துரையிடுக