14 ஜூலை, 2010

கஷ்மீர் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் தினமணி!

"அமர்நாத் யாத்ரிகளுக்கு பயங்கரவாதிகள் குறி!" - என்ற தலைப்பில் தினமணி நாளிதழ் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. உண்மையில் இது செய்தி அல்ல. கஷ்மீர் போராட்டத்தை வாசகர்கள் காழ்ப்புணர்வுடன் பார்ப்பதற்காக தயாரிக்கப்பட்டிருக்கும் விசமத்தனம். அமர்நாத்தில் உள்ள செட்டப் செய்யப்பட்ட பனிலிங்கத்தை தரிசிப்பதற்காக வரும் பக்தர்களை தாக்குவதற்காக பாகிஸ்தான் எல்லையில் உள்ள பயங்கரவாதிகள் திட்டமிட்டிருக்கிறார்களாம். இது குறித்த பல்வேறு தகவல்களை சேகரித்துவிட்டு தாக்குதலுக்கான உத்திரவை பிறப்பித்திருக்கிறார்கள் என்று தினமணி கூறுகிறது. இதற்கு ஆதாரமென்ன? எதுவுமில்லை.

அடுத்து தினமணி கூறுவதை அப்படியே தருகிறோம்.
"பாலஸ்தீனத்துப் போராளிகள் இன்டிஃபாதா என்ற முறையில் கற்களை வீசி தாக்கியதைப்போல காஷ்மீரிலும் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் மீது கற்களை வீசித் தாக்குமாறு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகின்றனர்.”

“போலீசாரை அடித்து காயப்படுத்தும் இளைஞர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் ரொக்கப்பணம் தந்து ஊக்குவிக்கின்றனர். உள்ளூரில் இருக்கும் அவர்களுடைய ஏஜெண்டுகள் மற்றவர்களுக்குத் தெரியாமல் பெருந்தொகைகளை அவர்களுக்குத் தருகின்றனர். இதனால் பல இளைஞர்கள் மேற்படிப்பு, வேலை என்று எதிலும் அக்கறை காட்டாமல் காஷ்மீரின் முழு விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்டு போலீஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.”

“இந்தத் தாக்குதல் எல்லை மீறி அதிகரித்துக் கொண்டே வருவதால் இப்போது ராணுவம் அழைக்கப்பட்டிருக்கிறது. ராணுவம் தன் பொறுப்பில் காஷ்மீரப் பள்ளத்தாக்கை எடுத்துக்கொண்டுவிட்டால் பிறகு ஊரடங்கு உத்தரவு கண்டிப்பாக அமல்படுத்தப்படுவதுடன், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு வலுவான பதிலடி தரப்படும் என்பதால் அவர்களுடைய கவனத்தைச் சிதறவைக்கவும் நிலைமையை மேலும் சிக்கலாக்கவும் ஹிந்துக்களான அமர்நாத் யாத்ரிகர்களைத் தாக்கி பெரும் சேதம் விளைவிக்குமாறு பயங்கரவாதிகள் எல்லைக்கு அப்பாலிருந்து தூண்டி வருகின்றனர்.”
– தினமணி, 12.07.2010

கடந்த மாதம் முழுவதும் கஷ்மீர் பள்ளத்தாக்கில் துணை இராணுவத்தின் அட்டூழியத்தை எதிர்த்து மக்கள் போர்க்குணமிக்க முறையில் போராடி வருகின்றனர். ஆனால் அந்தப் போராட்டம் பாக்., ஆதரவு பயங்கரவாதிகளால் தூண்டி விடப்படுகிறதாம்.

கல்லெறிவதற்கு கூட பணம் கொடுக்கப்படுகிறது என்று தினமணி கூசாமல் பொய் சொல்கிறது. இதுவரை 20க்கும் மேற்பட்ட மக்கள் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களெல்லாம் பணத்துக்காக செத்திருக்கிறார்கள் என்றால் தினமணி எவ்வளவு நயவஞ்சகமாக பேசுகிறது பாருங்கள்!

கஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ”இந்தியாவே வெளியேறு” என்ற முழக்கம் ஓங்கி ஒலிக்கிறது. அது இந்திய இராணவம் மற்றும் துணை இராணுவத்தை எதிர்த்து மக்கள் வீரஞ்செறிந்த முறையில் போராடுவதின் அடையாளம். அதை உண்மைதானா என்று பார்த்தறிய விரும்பினால் தினமணி ஆசிரியர் நேரில் சென்று விசாரிக்க வேண்டும்.

இறுதியாக அமர்நாத் பக்தர்கள் இதுவரை 2.90 இலட்சம் பேர் பதிவு செய்து அதில் 1.35 பக்தர்கள் பயணத்தை முடித்திருப்பதாக தினமணி கூறுகிறது. எனினும் இதுவரை இவர்கள் மீது எந்தத் தாக்குதலும் நிகழவில்லை. அதற்கு பயங்கரவாதிகள் தீவிரமாக முயற்சி எடுத்து வருவதாக தினமணி கூறுகிறது. அதையும் வதந்தி போல அல்லாமல் நேரிடையாக பயங்கரவாதிகளின் பேச்சை ஒட்டுக்கேட்டது போல எழுதுகிறது.

மேசையில் இருந்து கொண்டு கஷ்மீரைப் பற்றிய இத்தகைய செய்திகளை தினமணி மட்டுமல்ல,ஏனைய தேசிய பத்திரிகைகளும் திட்டமிட்டு உருவாக்குகின்றன. ஆனால் இவர்களின் அவதூறைப் புறந்தள்ளி காஷ்மீர் மக்களின் போராட்டம் அன்றாடம் வளர்ந்து வருவது கண்கூடு.
vinavu

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கஷ்மீர் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் தினமணி!"

கருத்துரையிடுக