4 ஆக., 2010

டெல்லி மேல்சபை தேர்தலில் ஓட்டுக்கு ரூ.1 கோடி கேட்கும் எம்.எல்.ஏ.க்களின் வீடியோ

டெல்லி,ஆக4:டெல்லி மேல்சபை தேர்தலில் ஓட்டுக்கு ரூ.1.கோடி கேட்கும் எம்.எல்.ஏ.க்களின் வீடியோ காட்சி வெளிவந்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து டெல்லி மேல்- சபைக்கு 2 எம்.பி.க்கள் தேர்வு செய்ய சமீபத்தில் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஜார்க்கண்ட் எம்.எல்.ஏ.க்கள் கட்சி கட்டளைப்படி ஓட்டு போடுவார்களா? அல்லது பணம்வாங்கி கொண்டு ஓட்டு போட தயாராக இருக்கிறார்களா? என கண்டறிய சி.என்.என்.- ஐ.பி.என். டி.வி. ரகசிய திட்டம் ஒன்றை தீட்டியது.

இதற்காக நிருபர்கள்,புரோக்கர் போல செயல்பட்டு எம்.எல்.ஏ.க்கள் சிலரை அணுகினார்கள்.பஞ்சாப்பில் தொழில் அதிபர் ஒருவர் மேல்- சபை எம்.பி.யாக விரும்புகிறார்.அவருக்கு ஓட்டு போடுங்கள் என்று எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசினார்கள்.இதை ரகசியமாக வீடியோவிலும் பதிவு செய்தனர். தேர்தல் நடப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே இந்த ஆபரேஷன் தொடங்கியது.

இதற்காக ராஞ்சியில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் எம்.எல்.ஏ.க்களை ரகசியமாக சந்தித்துப் பேசினார்கள். எம்.எல்.ஏ.க்களும் இந்த நாடகத்தை உண்மை என நம்பிவிட்டனர்.

முதலில் நிருபர்கள் குழு ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏ. லால் மகதோசை சந்தித்தது. அவர் ரூ.1 கோடி பணம் கொடுங்கள் ஓட்டு போடுகிறேன் என்றார். மேலும் 5 எம்.எல்.ஏ.க்களை ஓட்டு போட வைக்கிறேன். அவர்களுக்கும் பணம் கொடுங்கள் என்று கேட்டார்.

கட்சி கொறடா உத்திரவையும் மீறி நீங்கள் ஓட்டுப்போட தயாராக இருக்கிறீர்களா? என்று நிருபர்கள் கேட்டதற்கு கொறடா உத்தரவு எங்களை கட்டுப்படுத்தாது என்று அவர் கூறினார்.

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சார்பில் கே.டி.சிங் என்பவரை வேட்பாளராக நிறுத்தி இருந்தனர். அவருக்கு நீங்கள் ஓட்டு போடமாட்டீர்களா? என்று அவரிடம் கேட்டதற்கு கே.டி.சிங் எங்களுக்கு பணம் ஏதும் தரவில்லை. அவர் கட்சி தலைவருக்கு மட்டும் பணம் கொடுத்து இருக்கிறார்.எனவே அவருக்கு ஓட்டு போடமாட்டோம் என்று மகதோ கூறினார்.

அடுத்து நிருபர்கள் குழு ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவில் மற்றொரு எம்.எல்.ஏ.வான சிமோன் மராண்டியை சந்தித்தது. அவர் ரூ.2 கோடி தந்தால் ஓட்டுப்போடுகிறேன். மேலும் சிலரையும் ஓட்டு போட வைக்கிறேன் என்றார்.

பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. உமாசங்கர் அகிலா தனக்கு ரூ.50 லட்சமும், காரும் வேண்டும் என்று கேட்டார். தன்னிடம் 10 முதல் 12 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்றார்.அதற்கு கார் தர முடியாது என்று நிருபர் சொல்ல அப்படியானால் தலைக்கு ரூ.50 லட்சம் வேண்டும் என்று கேட்கிறார்.

நிருபர்கள் குழு சார்பில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ் ரஞ்சன், சவான் லக்டா,யோகேந்திர சாவ் ஆகியோரையும் சந்தித்தது. அவர்களும் பணம் கொடுத்தால் ஓட்டு போடுவதாக கூறினார்கள்.

இந்த காட்சிகளை எல்லாம் வீடியோவில் பதிவு செய்திருந்த நிருபர்கள் நேற்று இதை டி.வி.யில் ஒளிபரப்ப செய்தனர். டெல்லி மேல்- சபையில் அரசியல் சம்பந்தமே இல்லாத பல தொழில் அதிபர்கள் எம்.பி.யாகி உள்ளனர். அவர்கள் ஏதாவது ஒரு மாநிலத்தில் போட்டியிட்டு எம்.பி.யாகி வந்து விடுகின்றனர்.

அவர்கள் இதே போல பணம் கொடுத்து ஓட்டு வாங்கிதான் எம்.பி.யாக வருவதாக ஏற்கனவே புகார்கள் எழுந்தன. இது உண்மைதான் என்பதை டி.வி. நிறுவனம் இப்போது அம்பலப்படுத்தி உள்ளது.

ஜார்க்கண்டில் நடந்த தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர் கே.டி.சிங்,காங்கிரஸ் வேட்பாளர் தீரஜ்சாகு ஆகியோர் வெற்றி பெற்றனர். தீரஜ்சாகு 28 ஓட்டுகளும், கே.டி. சிங் 32 ஓட்டுக்களும் பெற்றனர். அவர்கள் எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுத்தார்களா? என்பது தெரியவில்லை.

இதற்கிடையே நிருபர்கள் குழுவிடம் பேரம் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும், கட்சி மேலிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "டெல்லி மேல்சபை தேர்தலில் ஓட்டுக்கு ரூ.1 கோடி கேட்கும் எம்.எல்.ஏ.க்களின் வீடியோ"

கருத்துரையிடுக