1 ஆக., 2010

இந்தியாவில் இன்னும் 10 ஆண்டுகளில் கடும் தண்ணீர் பற்றாக்குறை: அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்,ஆக1:இந்தியாவில் இன்னும் 10 ஆண்டுகளில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என அமெரிக்க அமைச்சர் ராபர்ட் பிளேக் எச்சரித்துள்ளார். தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சரான ராபர்ட் பிளேக் வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேலும் பேசியதாவது:

மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நகரமயமாக்கல் ஆகியவற்றால் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் என்பது இந்தியாவில் சவாலாக உருவெடுத்துள்ளது. மாநிலங்களுக்கு இடையே மோதல் மற்றும் எல்லைப் பிரச்னைகளுக்கு தண்ணீர் ஒரு காரணமாக ஆகிவருகிறது. இந்தியாவில் 12 சதவீதம் பேருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை. நாட்டில் மொத்தம் உள்ள 626 மாவட்டங்களில் பாதிக்கும் மேற்பட்டவை 2009-ல் வறட்சியால் பாதிக்கப்பட்டன.

இந்தியாவின் தண்ணீர்த் தேவையில் 75 சதவீதம் 3 மாதங்களில் பெய்யும் மழை மூலம் கிடைக்கிறது. ஆனால், அதை தேக்கிவைக்க போதுமான வசதிகள் இல்லை.

நகரப் பகுதிகளில், எல்லா வருவாய் தரப்பினரும் தண்ணீரை பணம் கொடுத்து வாங்கும் நிலையே உள்ளது. நகரங்களில் 40 சதவீத குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. 36 சதவீதம் குடும்பங்களுக்கு மட்டுமே கழிப்பிட வசதி உள்ளது.

அசுத்தமான குடிநீர் காரணமாக பலவிதமான நோய்களுக்கு மக்கள் ஆளாகிறார்கள். இதனால் குழந்தை இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது.
÷நாட்டின் பல பகுதிகளில் விவசாயத்துக்கு போதுமான நீர் கிடைப்பதில்லை. 2025-ல் உலகில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மக்கள் தொகை பெருக்கம், பருவநிலை மாற்றத்தால் பனிமலைகள் உருகுதல் உள்ளிட்டவையால் தோன்றும் இதுபோன்ற சவால்களை அரசாங்கத்தால் மட்டுமே எதிர்கொள்ள முடியாது. மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் ராபர்ட் பிளேக்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இந்தியாவில் இன்னும் 10 ஆண்டுகளில் கடும் தண்ணீர் பற்றாக்குறை: அமெரிக்கா எச்சரிக்கை"

கருத்துரையிடுக