7 ஆக., 2010

கஷ்மீர்:லடாக் மற்றும் லே பகுதிகளில் கன மழை - 115 பேர் பலி

ஜம்மு,ஆக7:ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தில் லடாக் மற்றும் லே பகுதிகளில் பெய்து வரும் மிக கனத்த மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சுமார் 115 பேர் வரை பலியாகியுள்ளனர். மேலும் ஏராளமானோரைக் காணவில்லை.

இந்தப் பகுதியில் சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன், தகவல் தொடர்பும் பாதிக்கப்பட்டுள்ளது.





கடந்த ஒரு வார காலத்திற்கும் மேல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள கஷ்மீரில் இப்போது மழை மற்றும் வெள்ளம் பெரும் பாதிப்பையும், உயிர்ச் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் லடாக், லே பகுதியில் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

வெள்ளத்துக்கு இப்பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் படை அலுவலகமும் தப்பவில்லை. வெள்ளத்தில் சிக்கிய 50 வீரர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவமனைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மழை மற்றும் வெள்ளத்திற்கு பலியானோரில் 3 ராணுவ வீரர்களும் அடங்குவர். மீட்புப் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெள்ளம் சூழப்பட்ட பகுதிகளில் ஏராளமானோரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கஷ்மீர்:லடாக் மற்றும் லே பகுதிகளில் கன மழை - 115 பேர் பலி"

கருத்துரையிடுக