7 ஆக., 2010

காமன்வெல்த் போட்டி ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த முடிவு

டெல்லி,ஆக7:சமீபத்தில் மணிசங்கர் அய்யர் எம்.பி., காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாகவும், போட்டி தோல்வி அடைந்தால் மகிழ்ச்சி அடைவேன் என்றும் கூறினார். அதன் பிறகு தான் காமன் வெல்த் போட்டி ஊழல்கள் அம்பலத்துக்கு வந்தன. இது தொடர்பான விசாரணைகளை சிபிஐ நடத்த முடிவு செய்ய செய்யப்பட்டுள்ளது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் டெல்லியில் அக்டோபர் மாதம் 3-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் சுமார் 70 நாட்டு வீரர்கள்-வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.

உலக அளவில் இந்திய விளையாட்டுத் துறைக்கு கவுரவம் தேடித்தர வேண்டும் என்பதற்காக மத்திய அரசு காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு சுமார் ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. இந்த பணம் மூலம் டெல்லியில் சர்வதேச தரத்தில் விளையாட்டு ஸ்டேடியங்கள், வீரர்கள் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு வருகிறது. டெல்லி நகரமும் அழகு படுத்தப்பட்டு வருகிறது.

போட்டி நடப்பதற்கு சரியாக இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் காமன் வெல்த் விளையாட்டுப்போட்டி ஏற்பாடுகள் எங்கு பார்த்தாலும் ஊழல் நடந்து இருப்பது தெரியவந்துள்ளது. போட்டி ஏற்பாடுகளின் ஒவ்வொரு விஷயத்திலும் ஊழல் நடந்துள்ள தகவல் தினமும் வெளி வந்த வண்ணம் உள்ளது. ஒதுக்கப்பட்ட பணத்தில் சுமார் 40 சதவீதம் ஊழல் மூலம் உறிஞ்சப்பட்டுள்ளது.

காமன்வெல்த் போட்டிக்காக கட்டப்படும் ஸ்டேடியங்கள், வாங்கப்படும் கருவிகள் தரமானதாக இல்லை என்று கடந்த ஆண்டே இந்திய தலைமை தணிக்கைத்துறை கண்டுபிடித்து மத்திய அரசுக்கு அறிக்கை கொடுத்தது. ஆனால் அதை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் மணிசங்கர் அய்யர் எம்.பி., காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாகவும், போட்டி தோல்வி அடைந்தால் மகிழ்ச்சி அடைவேன் என்றும் கூறினார். அதன் பிறகு தான் காமன் வெல்த் போட்டி ஊழல்கள் அம்பலத்துக்கு வந்தன.

கடந்த வாரம் பளு தூக்கும் வீரர்களுக்கான மைதானத்தை மத்திய மந்திரி ஜெய்பால் ரெட்டி திறந்து வைத்தார். அப்போது பெய்த மழையில் ஸ்டேடியம் ஒழுகி அவரே நனைந்து விட்டார். இதன் மூலம் மைதானங்கள் தரமானதாக இல்லை என்ற தணிக்கைத் துறையின் குற்றச்சாட்டு நிரூபணமானது. இதே லட்சனத்தில் தான் மற்ற ஸ்டேடியங்களும் உள்ளன.

போட்டி ஏற்பாடுகளில் சின்ன, சின்ன விஷயங்களில் கூட அதிக பணத்தை கணக்கில் எழுதி, முறை கேடுகள் நடந்துள்ளது. வீரர்கள் நடை பயிற்சி செய்யும் டிரெட்மில் என்ற எந்திரத்தின் அடக்க விலையே சில ஆயிரம் தான். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தால் கூட அதிகபட்சம் ரூ.5 லட்சம் தான்.

ஆனால் டிரெட்மில் எந்திரம் ஒவ்வொன்றும் ரூ.10 லட்சம் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக கணக்கு எழுதியுள்ளனர். அது போல போட்டிக்கு பலூன்கள் வாங்குவதற்கு மட்டும் ரூ.4 ஆயிரம் கோடியை ஒதுக்கி உள்ளனர். இது தணிக்கையாளர்களுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

மேலும் போட்டிக்காக ஏராளமான உபகரணங்கள் வாடகைக்கு பெறுவதாக கூறப்பட்டுள்ளது. இவை அனைத்திலும் கள்ள கணக்குகள் எழுதி பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு தரப்பில் இருந்தும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் மவுனமாக உள்ளனர். இந்த ஊழல் பற்றி எதிர்க் கட்சிகள் விசாரணை நடத்த கோரியும் பிரதமர் மன்மோகன்சிங் இன்னமும் வாயைத்திறக்கவில்லை. போட்டி அமைப்புக்குழு தலைவரான சுரேஷ் கல்மாடி மட்டும் எந்த விசாரணையையும் சந்திக்க தயார் என்று கூறியுள்ளார்.

அவர் காமன் வெல்த் நிர்வாகக் குழுவின் செயற்குழு கூட்டத்தையும் கூட்டி உள்ளார். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. காமன் வெல்த் போட்டி ஊழல் குறித்து ஆராய ஏற்கனவே மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத் துறையும் காமன்வெல்த் போட்டி முறைகேடுகளை விசாரித்து வருகிறது. லஞ்ச ஒழிப்புத் துறையினர் இதுவரை நடத்திய விசாரணை மூலம் 16 திட்ட ஏற்பாடுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதை உறுதி செய்துள்ளது. இதையடுத்து மற்ற திட்ட ஏற்பாடுகளிலும் நிச்சயம் ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

எனவே காமன்வெல்த்போட்டி ஊழலைவிசாரிக்கும் பொறுப்பை சி.பி.ஐ. யிடம் ஒப்படைக்க லஞ்ச ஒழிப்புத்துறை தீர்மானித்துள்ளது. இதுவரை கண்டுபிடித்த ஊழல் ஆதாரங்களை, சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க லஞ்ச ஒழிப்புத்துறை முன் வந்துள்ளது.

ஆனால் சி.பி.ஐ. உடனடியாக தனது விசாரணையை தொடங்காது என்று கூறப்படுகிறது. அக்டோபர் மாதம் 2-வது வாரம் போட்டிகள் முடிந்த பிறகே சி.பி.ஐ. தன் விசாரணையை தொடங்கும் என்று தெரிகிறது. அனேகமாக நவம்பர் மாதம் தான் சி.பி.ஐ. பணி தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே காமன் வெல்த் விளையாட்டுப்போட்டிக்காக நிதியை ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு டெல்லி மாநில முதல்வர் ஷீலா தீட்சித் திருப்பி விட்டு விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல வாழ்வுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.750 கோடி நிதியை காமன் வெல்த்போட்டி ஏற்பாட்டுக்காக திசை திருப்பி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை டெல்லி முதல்-மந்திரி ஷீலா தீட்சித் முதலில் மறுத்தார். ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரூ.744.35 கோடி பணத்தை டெல்லி மாநில அரசு திசை திருப்பியது உறுதியானது.

தலித்துக்களுக்கானத தன்னார்வு அமைப்பு ஒன்றும் டெல்லி அரசு தாழ்த்தப்பட்டோருக்கான நிதியை காமன் வெல்த் போட்டிக்கு கொடுத்ததை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளது. இதையடுத்து ஷீலா தீட்சித் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

காமன் வெல்த்போட்டி ஏற்பாடுகளில் ஊழல் மயமாக இருப்பதால் இந்திய ரயில்வேயும், இந்திய கிரிக்கெட் அமைப்பும் பல நூறு கோடி ரூபாய் ஸ்பான்சரை வாபஸ் பெறப் போவதாக மிரட்டி உள்ளன. இது மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

விலைவாசி உயர்வு பிரச்சினை, காஷ்மீர் பிரச்சினை, தெலுங்கானா பிரச்சினை, மாவோயிஸ்டுகள் பிரச்சினை என்று பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கும் பிரதமர் மன்மோகன்சிங், காமன்வெல்த் போட்டி ஊழல் பிரச்சினை காரணமாக மேலும் விழி பிதுங்கிபோய் உள்ளார். இந்த பிரச்சினையில் அவர் விரைவில் முடிவு எடுப்பாரா? என்று எல்லா தரப்பிலும் எதிர்பார்க்கிறார்கள்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "காமன்வெல்த் போட்டி ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த முடிவு"

கருத்துரையிடுக