8 ஆக., 2010

குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவுபடி சி.பி.ஐ. காவலில் அமித் ஷா

அகமதாபாத்,ஆக8:குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் அமித் ஷாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை சனிக்கிழமை தொடங்கினர்.

போலி என்கவுன்ட்டர் வழக்கில் அமித் ஷா கடந்த ஜூலை 25-ல் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவுடன் இவரிடம் சிபிஐ மூன்று நாள் விசாரணை நடத்தியது.

பின்னர் 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் குஜராத் மாநில சிறப்பு நீதிமன்றத்தில் கோரப்பட்டது. இதற்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல் முறையீடு செய்தது. 2 நாள் காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது.

இதையடுத்து டாக்டர்கள் குழுவுடன் சபர்மதி சிறைச்சாலைக்கு சனிக்கிழமை காலை வந்த சிபிஐ அதிகாரிகள் அமித் ஷாவை தங்கள் பொறுப்பில் எடுத்துச் சென்றனர். முன்னதாக வழக்கமாக மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைகள் அவருக்குச் செய்யப்பட்டன.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் இது தொடர்பான விரிவான அறிக்கையை அளிக்க இயலாது என்று நீதிபதி அகில் குரேஷி, அமித் ஷா தரப்பு வழக்கறிஞரிடம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது தெரிவித்தார்.

நீதிபதியின் தீர்ப்பைத் தொடர்ந்து, அமித் ஷாவிடம் சிபிஐ விசாரணை நடத்துவதை விடியோ பதிவு செய்ய வேண்டும் என்று அமித் ஷாவின் வழக்கறிஞர் ஜெத்மலானி வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால் இதற்கு சிபிஐ வழக்கறிஞர் கே.டி.எஸ்.துளசி கடும் ஆட்சேபம் தெரிவித்தார். விடியோ பதிவு செய்வது என்பது கால விரயம் செய்யும் நடவடிக்கை என்று கூறினார்.

சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை கோர அமித் ஷா வழக்கறிஞர்கள் முடிவு செய்தனர். ஆனால் இதையும் நீதிபதி நிராகரித்தார்.

சொராஹ்ப்தீன் வழக்கில் முக்கியக் குற்றவாளியே அமித் ஷாதான். சொராஹ்ப்தீன் மட்டுமல்லாமல் அவரது மனைவி கெளசர் பீ, முக்கிய சாட்சியான துளசி பிரஜாபதி ஆகியோரும் அமித் ஷாவின் உத்தரவின் பேரிலேயே கொல்லப்பட்டனர் என்று கே.டி.எஸ்.துளசி வாதாடினார்.

இந்த வழக்கு தொடர்பான தொலைபேசி உரையாடல் பதிவுகளையும் குஜராத் சிஐடி போலீஸிடமிருந்து சிபிஐ பெற்றுள்ளது என்று தனது வாதத்தின்போது துளசி குறிப்பிட்டார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான ஐபிஎஸ் அதிகாரிகள் டி.ஜி. வன்ஸாரா, ராஜ்குமார் பாண்டியன், எம்.என்.தினேஷ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவுபடி சி.பி.ஐ. காவலில் அமித் ஷா"

கருத்துரையிடுக