1 ஆக., 2010

ரஷ்யாவில் பயங்கர காட்டுத் தீ: 1,500 வீடுகள் எரிந்து நாசம்

மாஸ்கோ,ஆக,1:ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத் தீயில் 1,500 வீடுகள் எரிந்து நாசமானது.ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் தற்போது கோடை காலம் என்பதால் வெயில் வாட்டி வதைக்கிறது.
கடந்த 130 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெப்பம் பதிவாகியிருக்கிறது. மேற்கு மற்றும் மத்திய ரஷ்யாவில் கடந்த 5 வாரங்களாக வெப்பம் 35 டிகிரி செல்சியசை தாண்டி பதிவாகிறது.நேற்று முன்தினம் அங்கு 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

இந்த வார இறுதியில் தலைநகர் மாஸ்கோ மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வெப்பம் 40 டிகிரியை தாண்டுமென வானிலை மையம் எச்சரித்துள்ளது.அங்கு வீசி வரும் அணல் காற்று காரணமாக காடுகள் தீப்பற்றி எரிகிறது.

வோல்கா பகுதியில் நிசி நோவ்கொராடு என்ற இடத்தில் 547 வீடுகள் காட்டு தீயில் எரிந்து நாசமாயின. தவிர வயல்வெளிகளிலும் காட்டு தீ பரவியதால் பயிர்கள் தீயில் கருகின.அடர்ந்த புகை மூட்டமும் ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கையாக அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அதேபோல மற்றொரு பகுதியில் காட்டு தீயில் 341 வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமானது. அப்பகுதியில் வசித்த 1600 பேர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பள்ளிக்கூடங்களிலும், நிவாரண முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். காட்டு தீயை கட்டுப்படுத்தும் பணியிலும் சிறப்பு விமானங்களும்,ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

காட்டு தீயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வோல்கா பகுயை,பிரதமர் விளாடிமிர் புடின் பார்வையிட்டார்.


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ரஷ்யாவில் பயங்கர காட்டுத் தீ: 1,500 வீடுகள் எரிந்து நாசம்"

கருத்துரையிடுக