அகமதாபாத்,ஆக9:நரேந்திர மோடி அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இடம் பெற்று பின்னர் பாஜகவிலிருந்து விலகி தற்போது மோடிக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருபவரான கோர்தான் ஜடாபியா மற்றும் 2 போலீஸ் அதிகாரிகளை கோத்ராவுக்குப் பிந்தைய முஸ்லிம்களுக்கு எதிரான இனக்கலவர வழக்கில் சுப்ரீம் கோர்ட் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) சேர்த்துள்ளது.இவர்கள் மீது பிரிவினைவாதத்துடன் செயல்பட்டதாக எஸ்ஐடி குற்றம் சாட்டியுள்ளது. முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் தலைமையிலான இந்த எஸ்ஐடி, மூன்று பேரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும், கிரிமினல் நோக்குடன் செயல்பட்டதாகவும் கூறியுள்ளது.
2002ம் ஆண்டு கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்டது. இதையடுத்து குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக பெரும் கலவரத்தில் சங் பரிவார் அமைப்புகள் இறங்கின. இதில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
இந்த இனக்கலவர வழக்கை விசாரிக்க கடந்த 2008ம் ஆண்டு எஸ்ஐடியை சுப்ரீம் கோர்ட் நியமித்தது. கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் அதற்குப் பிந்தைய கலவர வழக்கை எஸ்ஐடி விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் தற்போது கோர்தான் மற்றும் ஓய்வு பெற்ற கூடுதல் டிஜிபி எம்.கே.டான்டன், ஐஜி பி.பி.கோன்டியா ஆகியோரை சேர்த்துள்ளது எஸ்ஐடி. மூன்று பேருக்கும் எதிரான ஆதாரங்களையும் எஸ்ஐடி சேகரித்து விட்டது.
இந்தத் தகவல்களை சில நாட்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த காலாண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது எஸ்ஐடி.
எஸ்ஐடி உறுப்பினரான ஏ.கே.மல்ஹோத்ரா கையெழுத்திட்ட இந்த அறிக்கையில்,ஜடாபியாவுக்கு குற்றச் செயலில் தொடர்புடையதாக கூறியுள்ள எஸ்ஐடி, குற்றம் நடந்ததைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்ததாக மற்ற இரு போலீஸ் அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டியுள்ளது.
கலவரத்தையும்,வன்முறையையும் இரு அதிகாரிகளும் அடக்கத் தவறி விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
2002ம் ஆண்டு இணை காவல்துறை ஆணையராக இருந்தார் டான்டன். அதேசமயம், துணை கமிஷனராக இருந்தவர் கோன்டியா. அகமதாபாத் நகரில் இருவரும் பணிகளில் இருந்தனர். இவர்களது எல்லைக்குள் இருந்த நரோடா பாடியா பகுதியி 95 பேரும், குல்பர்க் சொசைட்டியில் 69 பேரும் உயிரோடும், கொடுரமாகவும் கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நரோடா பாடியா,குல்பர்க் சொசைட்டி,நரோடா கேம் வழக்குகளை ஹிமன்சு சுக்லா என்ற எஸ்.பி வசம் எஸ்ஐடி ஒப்படைத்துள்ளது.
முன்னதாக இவற்றை எஸ்.பிக்கள் பி.கே.மால், வி.வி.செளத்ரி, டிஎஸ்பி சுதார் ஆகியோர் விசாரித்து வந்தனர். தற்போது அவர்களை இந்த வழக்கிலிருந்து எஸ்ஐடி விடுவித்து விட்டது.

0 கருத்துகள்: on "கோத்ராவுக்குப் பிந்தைய கலவர வழக்கு- மோடி எதிர்ப்பாளர், 2 போலீஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு"
கருத்துரையிடுக