4 ஆக., 2010

20 ஆண்டுகளை கடந்துவிட்ட காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை

ஆக,4:இலங்கையில் கிழக்கு மாகாணத்திலுள்ள காத்தான்குடி பள்ளிவாசலொன்றில் 20 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளினால் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் நேற்று நினைவு கூறப்பட்டுள்ளது.

1990 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ம் தேதி காத்தான்குடி மஸ்ஜிதுல் ஜூம்மா பள்ளிவாசலில் இரவு நேரம் இஸாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது நடத்தப்டப்ட இந்த தாக்குதலில் முதியவர்கள் சிறுவர்கள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டார்கள். 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள்.

இலங்கையிலுள்ள பெரும்பான்மை முஸ்லிம் மக்களிடையே இன்னமும் ஒரு கருப்பு தினமாகவே கருதப்படுகின்ற இந்நாளை காத்தான்குடி பிரதேச முஸ்லிம்கள் வருடாந்தம் சுஹதாக்கள் தினமாக நினைவு கூர்ந்து அனுஷ்டித்து வருகின்றார்கள்.

சம்பவ தினம் இரவு தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தமையினால் ஜெனரேட்டர் வெளிச்சத்தில் தொழுகை நடந்ததாக சம்பவத்தை நினைவுபடுத்திக் கூறும் 40 வயதான அப்துல் கரீம் முஹமது லாபீர்.

தாக்குதலுடன் தொடர்புடைய விடுதலைப் புலிகள் துப்பாக்கிச் சூட்டுடன் கைக்குண்டு தாக்குதலையும் நடத்தியதாகவும் இந்த தாக்குதலில் முழங்காலிலும், இரண்டு கைகளிலும் தான் காயமடைந்ததாகவும் கூறுகின்றார்

விடுதலைப் புலிகளின் காத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இக்காலப் பகுதியில் ஏறாவூர், முள்ளிப்பொத்தானை மற்றும் அழிந்த பொத்தானை உட்பட கிழக்கிலுள்ள முஸ்லிம் கிராமங்கள் மீது நடத்திய தாக்குதல்கள் தமிழ், முஸ்லிம் இனங்களுக்கு இடையேயான உறவின் ஒரு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தியது.

அன்று ஏற்பட்ட பாதிப்பு 20 வருடம் கடந்தும் இன்னமும் பழைய நிலைக்கு திரும்பவில்லை என்கின்றார் மட்டக்களப்பு பல்சமய சமாதான ஒன்றியத்தின் துணைச் செயலாளரான ஐ.எம்.இலியாஸ் மெளலவி.

முஸ்லிம்கள் மீதான இந்த தாக்குதல் சம்பவங்கள் கவலைக்குரியது எனக் கூறும் மனித உரிமைகள் மற்றும் சமூக ஆய்வாளருமான பேரின்பம் பிரேம்நாத் அந்த வடு அவர்கள் மத்தியில் இன்னும் மாறவில்லை என்கின்றார்

தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கிடையிலான இன உறவை பழைய நிலைக்கு கொண்டு வரும் பொறுப்பு சமய மற்றும் அரசியல் தலைவர்களின் செயல்பாட்டிலேயே தங்கியிருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

இந்த சம்பவங்கள் நடந்து 20 ஆண்டுகளாகியும், இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே இன ஒற்றுமையையும் ஏற்படுத்த பல்தரப்பிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும்,எதிர்பார்க்கப்படுகின்ற வகையில் அப்படியான நெருக்கமான உறவுகளும் பரஸ்பர நம்பிக்கையும் இன்னும் ஏற்படவில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
BBC

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "20 ஆண்டுகளை கடந்துவிட்ட காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை"

ARSHAD சொன்னது…

NEVER FORGET THAT INCIDENT,.,
ALLAH GIVE PUNISHMENT TO LTTE.,INSHALLAH
ALLAHU AKBAR..
SALAM;

கருத்துரையிடுக