10 ஆக., 2010

அரசு நிறுவனம் மற்றும் கல்வி நிலையங்களில் 69% இட ஒதுக்கீடு: நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து முறையீடு

புதுடெல்லி,ஆக.10:தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப் பணிகளில் 69 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க அனுமதித்து உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

"வாய்ஸ் கன்ஸ்யூமர் கேர் கவுன்சில்' சார்பில் இந்த மறு பரிசீலனை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அனுமதித்து கடந்த ஜூலை 13-ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதை எதிர்த்து இந்த அமைப்பு ஏற்கெனவே வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், 69 சதவீத இடஒதுக்கீடுக்கு வழிவகுக்கும் சட்டம் தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்டு,அது அரசமைப்புச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.

9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்ட சட்டத்தை நீதிமன்றம் பரிசீலனை செய்ய முடியாது. எனினும் தமிழக அரசின் 1993-ம் ஆண்டு இடஒதுக்கீட்டு சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

ஒரு சட்டம் அரசமைப்புச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டிருந்தாலும் அது உச்சநீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்பட்டதுதான் என்று 2007-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

இதையடுத்து தமிழக அரசின் இட ஒதுக்கீடு சட்டம் உச்சநீதிமன்றத்தின் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

1993-ம் ஆண்டிலிருந்து இந்த அமைப்பு ஒவ்வோர் ஆண்டும் இடைக்காலமாக மனு தாக்கல் செய்யும்.அதன்படி தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் கூடுதலான இட ஒதுக்கீட்டுக்கு சமமாக பொதுப் பட்டியலில் உள்ள இடங்கள் அதிகரிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில்தான் இந்த ஆண்டு 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேநேரத்தில் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை எவ்வளவு என்ற விவரத்தை ஆதாரங்களின் அடிப்படையில் மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அரசு தெரிவிக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டு அளவை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நிர்ணயிக்க வேண்டும். அதற்கேற்ப மாநில அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் தீர்ப்பு கூறப்பட்டது.

இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி வாய்ஸ் கன்ஸ்யூமர் கேர் கவுன்சில் அமைப்பு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஜூலை 13-ம் தேதி தீர்ப்பை மறுபரிசீலனை செய்து அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அரசு நிறுவனம் மற்றும் கல்வி நிலையங்களில் 69% இட ஒதுக்கீடு: நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து முறையீடு"

கருத்துரையிடுக