4 ஆக., 2010

அவதூறான 'பிளாக்'குகளுக்கு 'கூகுள்' பொறுப்பாகாது

மும்பை,ஆக4:'கூகுள்' இணையதளத்தின், 'பிளாக்' எனப்படும் தனிநபர் விமர்சனங்கள், கட்டுரைகள் வெளியிடும் பகுதியில் அவதூறான செய்திகள் வெளியானால் அவற்றுக்கு அந்நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என்றும், செய்திகளின் ஆசிரியரே பொறுப்பாவார் என்றும், அந்நிறுவன முன்னாள் ஊழியர் விளக்கம் அளித்துள்ளார்.

'கூகுள்' இணையதளம், கட்டுரைகள், பத்திரிகைகள், விமர்சனங்கள், ஆராய்ச்சிகள் போன்றவற்றை, விருப்பப்பட்டவர்கள் எழுதி வெளியிடுவதற்கு ஏதுவாக www.blogger.com என்ற இணையதளச் சேவையை நடத்தி வருகிறது. இந்த, 'பிளாக்'கில் இவ்வளவு தான் எழுத வேண்டும் என்ற வரையறை கிடையாது என்பதாலும், இது இ-மெயில் போன்று இலவச அடிப்படைச் சேவையாகக் கிடைக்கிறது என்பதாலும்,பெரும்பாலோர் தங்கள் விமர்சனங்களை இதன் மூலம் தெரிவிக்கின்றனர்.
ஆனால், வெளியிட முடியாத, அநாகரிகமான, அவதூறான செய்திகளையும் விமர்சனங்களையும் கூட,சிலர் தங்கள் பெயரைக் குறிப்பிடாமல் வெளிப்படுத்த, இந்த, 'பிளாக்'கைப் பயன்படுத்துகின்றனர்.

அப்படி ஒரு, 'பிளாக்'கில் ஒருவர் அவதூறான சில விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தார் என்று, மூத்த பத்திரிகையாளர் ஒருவர், 2006, ஜூன் மாதமும், 2007, ஏப்ரலில் மற்றொருவரும், மும்பை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். அவர்கள் தம் மனுவில், அவதூறான செய்திகள் கொண்ட, 'பிளாக்'கை வெளியிட அனுமதித்ததாக, 'கூகுள்' நிறுவனத்தின் வெளியீட்டுப் பிரிவு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தற்காலிகமாக அந்த 'பிளாக்' செயல்படத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இதற்கிடையில், 2007, ஜூனில் 'பிளாக்' ஆசிரியர் மீதும், நிறுவன வெளியீட்டுப் பிரிவு பொறுப்பாளர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க, மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்தார்.

2008, அக்டோபரில், 'பிளாக்'குக்கு மும்பை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்தது. 'கூகுள்' இந்தியா நிறுவனத்தில் 2005ல் இருந்து 2007 வரை அதன் விற்பனை மற்றும் வெளியீட்டுப் பிரிவின் பொறுப்பாளராக இருந்தவர் சுந்தராமன். அவருக்கு எதிராக, ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து 2009, மார்ச்சில் மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்தார்.இதையடுத்து சுந்தராமன் தாக்கல் செய்த மனுவில், தான், 'கூகுள்' நிறுவனத்திலிருந்து விலகி மும்பையை விட்டு வெளியே சென்று விட்டதால், கோர்ட் சம்மனைப் பெறவில்லை என்று கூறினார். அதன்பின் 5,000 ரூபாய் ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.

இந்த ஆண்டில்,மாஜிஸ்திரேட்டின் நடவடிக்கையை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் சுந்தராமன் தாக்கல் செய்துள்ள மனுவில், 'கூகுள் நிறுவன ஊழியர்கள் எவருக்கும் அந்நிறுவனத்தையோ அதன் சேவைகளையோ கட்டுப்படுத்தும் அதிகாரம் கிடையாது.

அதேபோல், 'பிளாக்'கில் வரும் செய்திகளை அகற்றவோ, தடை செய்யவோ அதிகாரம் கிடையாது.வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துக்களை மக்களிடம் தெரிவிக்க, கூகுள், ஒரு தளம் மட்டுமே அமைத்து கொடுக்கிறது. மற்றபடி, வாடிக்கையாளர்களின் சொந்த கருத்துக்களுக்கு அந்நிறுவனமோ அதன் ஊழியர்களோ பொறுப்பேற்க முடியாது. 'பிளாக்' வெளியீடு என்பதை, 'பப்ளிகேஷன்' என்பதாகக் கருத முடியாது' என்று கூறியுள்ளார். அவர் மனு மீதான விசாரணை விரைவில் துவங்க உள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அவதூறான 'பிளாக்'குகளுக்கு 'கூகுள்' பொறுப்பாகாது"

கருத்துரையிடுக