4 ஆக., 2010

அப்துல் நாஸர் மஃதனிக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் மறுப்பு

பெங்களூர்,ஆக4:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் 31-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கேரள மாநிலக்கட்சியான பி.டி.பியின் தலைவர் அப்துல் நாஸர் மஃதனிக்கு கர்நாடகா உயர்நீதிமன்றமும் முன்ஜாமீன் மனுவை நிராகரித்துள்ளது.

சட்டவிரோத செயல்களை தடைச்செய்யும் மத்திய அரசின் சட்டத்தின்படி பதிவுச் செய்யப்பட்டுள்ள வழக்கில் முன்ஜாமீன் வழங்க அனுமதிகிடையாது என நீதிபதி என்.ஆனந்த் சுட்டிக்காட்டினார்.

ஐந்தாவது விரைவு செசன்ஸ் நீதிமன்றம் அப்துல் நாஸர் மஃதனி சமர்ப்பித்த முன்ஜாமீன் மனுவை நிராகரித்ததைத் தொடர்ந்து அவர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தை நாடினார்.

கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் முன்னாள் நீதிபதியாக பதவி வகித்த மூத்த வழக்கறிஞர் ரவி ஜி.நாயக் அப்துல் நாஸர் மஃதனிக்காக வாதாடினார்.

25-வது வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட மஃதனியின் முன்ஜாமீன் மனுவில் இரண்டு மணிநேரம் நீண்ட வாதபிரதிவாதங்கள் நடைபெற்றன. இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள தடியண்ட விட நஸீருடன் மஃதனி தொடர்புக்கொண்டார் என்பதற்கு வலுவான ஆதாரம் உள்ளது என்பதை அரசு தரப்பு வழக்கறிஞர் முக்கியமாக சுட்டிக்காட்டினார்.

பெங்களூர் குண்டுவெடிப்பு சதித்திட்டத்தில் மஃதனிக்கு பங்குண்டு என்ற குற்றஞ்சாட்டி ஏற்கனவே செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜராக்கிய சாட்சிகளை உயர்நீதிமன்றத்திலும் ஆஜராக்கியது அரசு தரப்பு.

அதேவேளையில், பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் சி.ஆர்.பி.சி 91-ன்படி பிப்ரவரியில் சாட்சியாக்கி நோட்டீஸ் அனுப்பிய க்ரைம் ப்ராஞ்ச்சின் நடவடிக்கையை உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.

நீதிமன்றத்தின் அதிகார எல்லைக்குட்பட்ட நடவடிக்கையை போலீஸ் மேற்கொண்டது எதன் அடிப்படையில் என நீதிபதி என்.ஆனந்த் கேள்வி எழுப்பினார். பெங்களூர் வழக்கில் மஃதனிக்கு எதிராக குற்றப்பத்திரிகை இட்டுக்கட்டப்பட்டதும், சாட்சிகள் போலி என்றும் வழக்கறிஞர் ரவி ஜி.நாயக் வாதாடினார். ஆனால் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளவர் உள்ளிட்டவர்களுடன் மஃதனிக்கு தொடர்புண்டு என்பதுக் குறித்து புலனாய்வு அதிகாரிகளுக்கு கூடுதல் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அரசுதரப்பு நீதிமன்றத்திடம் எதிர் சத்தியபிரமாணத்தில் தெரிவித்தது.

கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது மஃதனியின் உடல்நிலையையும் கருத்தில் கொள்ளவேண்டும் என நீதிபதி ஆனந்த் உத்தரவிட்டார்.

இதற்கிடையே மஃதனிக்கெதிராக துணை மெட்ரோபாலிட்டன் விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்ட ஜாமீன் இல்லாத வாரண்ட்டின் கால அவகாசம் மேலும் இரண்டு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வாரண்டின் கால அவகாசம் நேற்று முடிவடைந்ததால் போலீஸ் அளித்த மனுவைத் தொடர்ந்து இந்த மாதம் 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அப்துல் நாஸர் மஃதனிக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் மறுப்பு"

கருத்துரையிடுக